» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

திங்கள் 10, பிப்ரவரி 2020 3:57:37 PM (IST)

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அமைக்கப்படும் என சேலத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 1000 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த, ஆசியாவிலேயே மிகப்பெரிய நவீன கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். தலைவாசலில் கால்நடை பூங்கா அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வுசெய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புக்கு பின்னர், சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைப்பதற்கான  பணிகள் தொடங்கப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.

கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், தமிழ்நாட்டில் மேலும் 3 கால்நடை தீவன தொழிற்சாலை அமைக்கப்படும். திருவண்ணாமலை,திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கால்நடை தீவன தொழிற்சாலைகள் அமைக்கப்படும். கால்நடை வளர்ப்பு தொழில் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக உள்ளது. கால்நடை துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப் பொருளாதார மேம்பாட்டிற்கு கால்நடை வளர்ப்பு திட்டம் உதவுகிறது. அரசின் திட்டங்களால் கிராமப்புற பொருளாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம்  காவேரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பினை உறுதிபடுத்திடவும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர் அரியலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் உள்ள காவேரி டெல்டா பகுதிகளை "பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக" மாற்றப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுகின்றேன். டெல்டா மாவட்டங்களை பாதுகாப்பதற்காக எங்களுடைய அரசு காவேரி டெல்டா பகுதிகளை "பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக" மாற்றப்படும்  என்ற அறிவிப்பை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். 

நீண்ட காலமாக டெல்டா பகுதியிலே இருக்கின்ற விவசாய பெருமக்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆகவே, அந்த உள்ளக் குமுறல்களை எங்களுடைய அரசு உணர்வுபூர்வமாக தெரிந்து கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். 

முதலமைச்சராக இருந்தாலும் நானும் ஒரு விவசாயி, அந்த விவசாயி என்ற நிலையிலே இருந்து பார்த்து, விவசாயிகள் படும் துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், முழுமையாக அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக இதனை நான் அறிவித்திருக்கின்றேன். இதை செயல்படுத்திட சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து, வழிமுறைகளை ஆராய்ந்து, இதற்கான ஒரு தனிச் சட்டம் இயற்றிட மாண்புமிகு அம்மாவின் அரசு  உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நான் உறுதிபட தெரிவித்துக் கொள்கின்றேன். இப்பகுதியில் புதிதாக ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை தொடங்குவதற்கு  இவ்வரசு எப்போதும் அனுமதி அளிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஒரு விவசாயி, விவசாயிகளின்  வாழ்வாதாரம் பாதிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் தமிழகத்திலே இனி கொண்டு வர முடியாது, அதற்கு நாங்கள் அனுமதியும் அளிக்க மாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு, முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory