» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

மறைமுக தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும்: உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

வெள்ளி 10, ஜனவரி 2020 10:45:58 AM (IST)

மாவட்ட ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தலின்போது வீடியோ பதிவு செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

தி.மு.க. சட்டப்பிரிவுச் செயலாளர் வக்கீல் கிரிராஜன். இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இருகட்டங்களாக 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அடுத்தகட்டமாக மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான மறைமுகத்தேர்தல் 11-ந்தேதி (நாளை) நடைபெற உள்ளது.

இந்த மறைமுக தேர்தலில் ஆளுங்கட்சியினர் தங்களுக்கு சாதகமான முடிவுகளைப்பெற பல்வேறு முறைகேடுகளை செய்து வருகின்றனர். சில இடங்களில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களையும்கூட ஆளுங்கட்சி தரப்பு தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்து வருகிறது. இதுகுறித்து ஏற்கனவே தி.மு.க. தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மாநில தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நேர்மையாகவும், நியாயமாகவும் மேற்கொள்ளும் என்று நம்புவதாகவும், தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பு கேமராக்களில் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2-ந்தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு முறைகேடுகள், குளறுபடிகள் நடந்தது. தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றும்கூட அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றதாக இறுதியில் அறிவிக்கப்பட்டது. எனவே மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தலின்போதும் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் மட்டுமின்றி ஆடியோவுடன் கூடிய வீடியோ பதிவும் செய்ய உத்தரவிட வேண்டும். தேர்தல் அதிகாரி, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தவிர்த்து, வேறு யாரையும் தேர்தல் நடைபெறும் மையத்துக்குள் அனுமதிக்கக்கூடாது.

இந்த தேர்தலில் வாக்குச்சீட்டுக்களை கிழித்துப்போடுவது, மை ஊற்றுவது போன்ற வேறு ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபட யாரையும் அனுமதிக்கக்கூடாது. சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் முன்னிலையிலேயே வாக்குகளை எண்ணி முடிவுகளை உடனடியாக அறிவிக்க உத்தரவிட வேண்டும். மேலும் போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் அறிவுறுத்த வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.நீலகண்டன் ஆஜராகி வாதிட்டார். அதேபோல மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் வக்கீல் ஆர்.நெடுஞ்செழியன் ஆஜராகி, மாவட்ட ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தலின்போது ஆடியோ இல்லாமல் வீடியோ பதிவு மட்டும் செய்யப்படும். விதிகளை பின்பற்றி தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும் என்று உத்தரவாதம் அளித்து வாதிட்டார். இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘இந்த வழக்கை பொதுநல வழக்காக கருத முடியாது. எனவே, இந்த வழக்கை சம்பந்தப்பட்ட நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

இதேபோல மதுரை உயர்நீதிமன்றத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த லலிதா, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துரைச் சேர்ந்த முருகன் ஆகியோர் மறைமுக தேர்தலை கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், ‘தமிழகம் முழுவதும் நாளை நடைபெற உள்ள மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்ய அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உடனடியாக அறிவுறுத்தப்படும்’ என உறுதி அளித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விஷயத்தில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என்று கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory