» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

எடப்பாடி பழனிசாமி ஆட்சி தமிழகத்தின் மிக இருண்ட காலம் : ஸ்டாலின் விமர்சனம்

திங்கள் 6, ஜனவரி 2020 3:35:49 PM (IST)

எடப்பாடி பழனிசாமி ஆட்சி தமிழகத்தின் மிக இருண்ட காலம்; ஆளுநர் உரையால் நாட்டில் எந்தவித தாக்கமும் ஏற்படப் போவதில்லை என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் இந்த மூன்றாண்டு காலம் தமிழகத்தின் மிக இருண்ட காலம். இந்த ஆட்சியில், முதல்வரே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். அவர் மட்டுமல்ல; முதல்வர் எவ்வழி எங்களுக்கும் அவ்வழி என்று, துணை முதல்வர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர், மின்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, தினந்தோறும் ஊழலிலேயே குளித்துத் திளைத்து வருகின்றனர். நுனி முதல் அடிவேர் வரை ஊழல் பாய்ந்தோடுவதால், மாநில நிர்வாகம் எனும் விருட்சம் உளுத்து, வலுவிழந்து, மக்களுக்கு ஒன்றுக்கும் உதவாத ஒதியமரமாகி விட்டது.

கோடநாடு முதல் குட்கா வரை, ஈரோடு - கரூர் முதல் தலைமைச் செயலகம் வரை, செய்யாதுரை முதல் சேகர் ரெட்டி வரை, எங்கும் ரெய்டுகள், ரெய்டுகள், ரெய்டுகள், கணக்கற்ற ரெய்டுகள். ரெய்டுகள் என்பது நாள்தோறும் நடக்கும் சகஜ நிகழ்வாகி, மாநிலமே அவமானத்தால் கூனிக் குறுகிவிட்டது. 4 லட்சம் கோடி ரூபாய் கடன், 5 லட்சம் குற்றங்கள் என கடன் சுமை எப்போதும் இல்லாதபடி ஏறியும், குற்றங்கள் பெருகியும் கூட, அது குறித்துக் கிஞ்சிற்றும் கலங்காமல், கடுகளவும் கவலைப்படாமல், என் கடன் ஊழல் செய்து நாளைக் கழிப்பதே என்ற பாணியில் பொல்லாத ஆட்சி ஒன்று இங்கே பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறது.

நீட் தேர்வில் இரட்டை வேடம்; தொழில் வளர்ச்சி இல்லை; சட்டம்-ஒழுங்கு சரியாகப் பேணப்படவில்லை; வேலையில்லாமல் இருக்கும் 90 லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் இல்லை; அறிவிப்புகளை முழுமையாக நிறைவேற்றும் அக்கறை இல்லை; விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும், மீனவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், இந்த ஆட்சியில் நிறைவோ, நிம்மதியோ இல்லை.

மதச்சார்பின்மைக்கு வேட்டு வைத்து, நாட்டில் பிளவுண்டாக்கும், மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஓட்டளித்து, அது நிறைவேறக் காரணமாகி; சிறுபான்மை முஸ்லிம்களுக்கும், இந்துக்களான ஈழத் தமிழர்களுக்கும் துரோகம் இழைத்து; தவறுகளுக்கெல்லாம் உச்சகட்டத் தவறு இழைத்துவிட்டது அதிமுக. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், மாநிலத் தேர்தல் ஆணையம்- காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் - அதிமுக எனும் முக்கோணக் கூட்டணி அமைத்து; அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், அனைத்து விதமான தேர்தல் தில்லு முல்லுகளிலும் ஈடுபட்டது இந்த அரசு.

நடுநிலையோடு எந்தக் கோணத்தில் பார்த்தாலும், யாருக்கும் பயன்படாத, அதிமுகவினருக்குக்கு மட்டுமே பயன்படுகிற, பொல்லாத ஒருதலை ஆட்சியே இங்கே நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மக்கள் நலனில் எப்போதும் ஏனோதானோவென நடந்து வரும் இப்படிப் பட்ட எதிர்மறை ஆட்சியில்; "ஊழல் என்பதே நோக்கம், பாஜக அரசின் பாதந் தாங்குவதே பரம சுகம்" என்று நடக்கும் அதிமுக ஆட்சியில்; ஏதோ சடங்குக்காகவும், சம்பிரதாயத்திற்காகவும் நடக்கும் இந்த ஆளுநர் உரையால் நாட்டில் எந்தவிதத் தாக்கமும் எள்ளளவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. எனவே அந்த உரையைப் புறக்கணித்து பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory