» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு மீண்டும் போராட்டம் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வெள்ளி 27, டிசம்பர் 2019 11:18:18 AM (IST)குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஒரு போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுக்கு நேற்று 95-வது பிறந்த நாள். அதையொட்டி, சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் அவரது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, நல்லகண்ணுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். விழாவில், மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 23-ந்தேதி நடைபெற்ற, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஒரு மிகப்பெரிய பேரணியை நாம் நடத்தி முடித்திருக்கிறோம். அந்தப் பேரணியில் பங்கேற்ற தலைவர்கள், முன்னோடிகள், செயல்வீரர்கள் என ஏறக்குறைய 8 ஆயிரம் பேர் மீது வழக்குப் போட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் தமிழகத்தில் ஆண்டு கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள், அதிலே இடம்பெற்றிருக்கும் அமைச்சர்கள், 5 ஆயிரம் பேர்தான் கலந்துகொண்டார்கள் எனக் கூறுகிறார்கள். ஆனால் காவல்துறை 8 ஆயிரம் பேர் மீது வழக்கு போட்டிருக்கிறது. எது உண்மை என்பதை முதலில் அவர்கள் சொல்ல வேண்டும். பத்திரிகைகளில், ஊடகங்களில் எல்லாம் லட்சக்கணக்கானோர் பங்கேற்றார்கள் எனச் செய்தி வந்துள்ளது. மத்திய அரசு, மாநில அரசின் உளவுத்துறையைச் சார்ந்தவர்கள் கணக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் எனக்கு வந்துள்ளது. எப்போதுமே அரசுக்குக் கணக்குக் கொடுப்பவர்கள், எதிர்க்கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டம், பேரணி எதுவாக இருந்தாலும் அதில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துத்தான் கூறுவார்கள்.

அதே சமயத்தில் ஆளுங்கட்சி நடத்தினால் 50 பேர் என்றால் 200 பேர் என்பார்கள். அது அவர்களுடைய வழக்கம். அது அவர்களை குஷிப்படுத்துவதற்காகச் சொல்லக்கூடியது. எது எப்படி இருந்தாலும், 8 ஆயிரம் பேர் மீது மட்டுமல்ல, 8 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை உறுதிபட இந்த நேரத்தில் எடுத்து சொல்லி இந்தப் போராட்டம் தொடரும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் வரையில் போராட்டம் தொடரும் என்று நான் ஏற்கனவே அறிவித்து இருக்கிறேன்.

இடையில் தமிழகத்தை பொறுத்தவரையில், உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை இருக்கும் காரணத்தால், தேர்தலுக்கு பிறகு எப்படி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக கலந்துபேசி முடிவெடுத்து அந்தப் பேரணியை நடத்திக் காட்டினோமோ, அதேபோல கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி அரசியலுக்கு அப்பாற்பட்ட தோழர்கள், நண்பர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் என அனைத்துத் தரப்பினரையும் அழைத்து, கலந்துபேசி இதுவரையில் தமிழ்நாட்டில் அல்ல, இந்தியாவிலேயே இப்படி ஒரு போராட்டம் நடந்தது இல்லை என்ற நிலையை நிச்சயமாக நாங்கள் உருவாக்குவோம் என்ற உறுதியை மட்டும் எடுத்துச்சொல்லி, 95-ம் வயதில் அடியெடுத்து வைக்கும் நல்லகண்ணுவை நான் வாழ்த்த, வணங்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மார்க்சியத்தின் மனித உருவாக நம்மிடத்தில் விளங்கிக் கொண்டிருப்பவர். அடித்தளத்து மக்களுக்காகத் தொடர்ந்து போராடக்கூடியவர். எளிமையாக, இனிமையாக, அதே நேரத்தில் கம்பீரமாக, துணிவாக ஒரு போராளியாக இருந்து பாடுபட்டுக் கொண்டிருக்கும், உழைக்கும், தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் நல்லகண்ணு நூறாண்டு காலம் இருந்து நமக்கு வழிகாட்ட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மூத்த தலைவர்கள் தா.பாண்டியன், மகேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory