» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மேயர், நகராட்சித் தலைவர்கள் கவுன்சிலர் மூலம் தேர்வு : தமிழக அரசு அவசரச்சட்டம் வெளியீடு

வியாழன் 21, நவம்பர் 2019 8:54:50 AM (IST)

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றின் தலைவர்கள் கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான அவசர சட்டத்தை மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று பிறப்பித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி தேர்தல் 1919ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டப்படி நடைபெறுவது வழக்கம். அதற்காக 1919 ம் ஆண்டு சட்டம் 2019ம் ஆண்டு எட்டாம் எண்ணுள்ளே அவசரச் சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டுள்ளது. மேயர், துணை மேயர் ஆகியோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வகை செய்யும் விதத்தில் சட்டத் திருத்தத்துக்கு அவசர சட்டம் வகை செய்துள்ளது. மேயர், துணை மேயர் தேர்தல் சம்பந்தப்பட்ட பிரிவுகள் அவசரச் சட்டத்தால் திருத்தப்பட்டுள்ளன.

1971 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மதுரை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டமும் 1981ம் ஆண்டு கோயம்புத்தூர் நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டமும் நேற்று வெளியிடப்பட்ட அவசரச் சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டுள்ளன.. மதுரை மாநகராட்சி, கோவை மாநகராட்சி மேயர்கள் துணை மேயர்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சிகளின் கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்யப்பட அவசர சட்டம் மூலம் வகை செய்யப்பட்டுள்ளது. 1920 ஆம் ஆண்டு மாவட்ட முனிசிபாலிட்டிகள் சட்டமும் அவசரச் சட்டத்தால் திருத்தப்பட்டுள்ளது.

முனிசிபாலிட்டிகளின்  தலைவர்கள்,  துணைத் தலைவர்கள் கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வகை செய்யப்பட்டுள்ளது. அவசர சட்டத்தில் இணைப்பாக விளக்க அறிக்கை ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அரசின் சட்டத்துறை செயலாளர் கோபி ரவிக்குமார் அந்த விளக்க அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளார். மாநகராட்சிகள் ,முனிசிபாலிட்டிகள், நகரப் பஞ்சாயத்துக்கள், ஆகியவற்றின் மேயர்கள், தலைவர்கள், கவுன்சிலர்கள் கட்சி அடிப்படையில் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிராம பஞ்சாயத்துக்களில்  கட்சி சாராத நிலையில் தேர்தல்கள் நடைபெற்றன.

பஞ்சாயத்து யூனியன், மாவட்ட பஞ்சாயத்துக்களுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது. இந்த அமைப்புகளின் தலைவர்கள் மறைமுகமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தச் சூழலில் தலைவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆகவும் கவுன்சிலர்கள் வேறு கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது.  இந்நிலையில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு சிக்கல் இல்லாமல் இயங்க வாய்ப்பு மிகவும் குறைவு. கவுன்சில் கூட்டங்கள் முறையாக நடக்க வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டது. மக்களுக்கு சேவை செய்வது என்ற நோக்கம் தோற்கடிக்கப்படும் நிலை உள்ளது.

இந்நிலையை மாற்றி, மேயர், நகராட்சித் தலைவர்கள், ஆகியவற்றுக்கு கவுன்சிலர்கள் மூலம் தேர்வு நடந்தால் இணக்கமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது என கருதப்பட்டது. சென்னை மாநகராட்சியில் 200 கவுன்சிலர்களும், மதுரை, கோவை மாநகராட்சிகளில் தலா 100 கவுன்சிலர்களும் உள்ளனர். எனவே மாநகராட்சிகள் சுமூகமாக நடைபெற, மறைமுக தேர்தல் முறைக்கு மாறுவது பொருத்தம் என கருதப்பட்டது. பலரிடமிருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் மறைமுகத் தேர்தல் முறைக்கு மாறலாம் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. எனவே உள்ளாட்சி அமைப்புகள் சுணக்கம் இன்றி இணக்கமாக நடைபெற சம்பந்தப்பட்ட சட்டங்களைத் திருத்துவது என முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவுக்கு செயல் வடிவம் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசு சட்டத் துறைச் செயலாளர் ரவிக்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory