» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

திருவள்ளுவரைப் போல் என் மீதும் சிலர் காவிச் சாயம் பூச நினைக்கிறார்கள் : ரஜினி பேட்டி

வெள்ளி 8, நவம்பர் 2019 3:15:08 PM (IST)

திருவள்ளுவரைப் போல் தன் மீதும் சிலர் காவிச் சாயம் பூச நினைக்கிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்தார். 

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் கமல் அலுவலகத்தில் நடைபெற்ற மறைந்த இயக்குநர் பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் . இதில் ரஜினி - கமல் இணைந்து பாலசந்தரின் மார்பளவு சிலையைத் திறந்து வைத்தனர். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியவுடன், தன் வீட்டு வாசலிலிருந்த பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி. அப்போது "எனக்குக் காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது. அது நடக்காது. திருவள்ளுவர் விஷயத்தைப் பெரிய சர்ச்சையாக்கியது அற்பத்தனமானது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை" என்று தன் பேச்சில் குறிப்பிட்டார் ரஜினி. 

இந்தச் சமயத்தில் சில ஊடகங்கள் மட்டுமே இருந்துள்ளன. இந்தக் கருத்துகள் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள். இதனைத் தொடர்ந்து ரஜினி வீட்டு வாசலில் நிருபர்கள் கூடினர். இதனால், மீண்டும் ரஜினி வெளியே வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: திருவள்ளுவரைப் போல் என் மீது காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது. இது முதல் முறையாக இல்லை. எப்போதுமே வெளிப்படையாகத் தானே பேசி வருகிறேன். இது அரசியலில் சகஜம். அதுவும் இந்தக் காலத்து அரசியலில் சகஜம். சிலர் பூச முயல்கிறார்கள். கண்டிப்பாக அது நடக்காது.

பாஜகவின் ட்விட்டர் கணக்கில் வெளியிட்டார்கள். ஊரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு எல்லாம் அப்படி பண்ண வேண்டும் எனச் சொல்லவில்லை. எவ்வளவோ விஷயங்கள் பேச வேண்டியது, சர்ச்சையாக்க வேண்டியதிருக்கிறது. நீங்கள்தான் இதைப் பெரிதாக்கி விட்டீர்கள். அயோத்தி வழக்கில் எந்த மாதிரியான தீர்ப்பு வந்தாலும், மக்கள் அமைதிக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் பாஜகவில் சேரப் போவதாக செய்தி வருகிறது. யார் கட்சியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் சந்தோஷப்படுவார்கள். அதை முடிவெடுக்க வேண்டியது நான். அதற்காக என்னையே நம்பி இருக்கிறார்கள் எனச் சொல்வது தவறு.

மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. தெரியாமல் எப்போதுமே நான் பேச மாட்டேன். இந்தியப் பொருளாதார வளர்ச்சி ரொம்ப மெதுவாக உள்ளது. அதற்கு மத்திய அரசு என்ன செய்ய வேண்டுமோ செய்ய வேண்டும். அரசியல் கட்சி அறிவிக்கும் வரை தொடர்ச்சியாகப் படங்களில் நடிப்பேன். எம்ஜிஆர் சார் கட்சி தொடங்கி முதல்வராகும் வரை நடித்தார் என்று தமிழருவி மணியன் ஐயா சொல்லியிருக்கார். தமிழகத்தில் இன்னும் ஆளுமைக்கான வெற்றிடம் இருக்கிறது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory