» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
ஊடகங்கள் ஊதிப்பெருக்கும் அளவுக்கு தண்ணீர் பிரச்சினை மோசம் இல்லை: ராமதாஸ்
திங்கள் 17, ஜூன் 2019 5:21:30 PM (IST)
ஊடகங்கள் ஊதிப்பெருக்கும் அளவுக்கு நிலைமை மோசம் இல்லை என்றாலும் கூட, சென்னையிலும், தமிழகத்தின் வறட்சி பாதித்த மாவட்டங்களிலும் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருவது உண்மை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் தண்ணீர் பஞ்சமும், வறட்சியும் வாட்டி வருகிறது. ஊடகங்கள் ஊதிப்பெருக்கும் அளவுக்கு நிலைமை மோசம் இல்லை என்றாலும் கூட, சென்னையிலும், தமிழகத்தின் வறட்சி பாதித்த மாவட்டங்களிலும் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருவது உண்மை. தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் மிக மோசமாக குறைந்து விட்ட நிலையில், அடுத்து மழை பெய்யும் வரை தண்ணீர் தட்டுப்பாடு தீர வாய்ப்பில்லை. எனினும், நிலைமையை சமாளிக்க சென்னையில் ஒவ்வொரு நாளும் 12,000 வாகனங்கள் மூலம் 900 மில்லியன் லிட்டர் அளவுக்கு தண்ணீர் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதுடன், இப்போதைய தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு இனிவரும் காலங்களில் இத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டியது அரசு மற்றும் மக்களின் கடமை ஆகும். தமிழகத்தில் குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், செயல்பாட்டிலும் கடைபிடித்து வருகிறது. தமிழ்நாட்டின் சராசரி ஆண்டு மழை அளவு 945 மில்லி மீட்டர் ஆகும். இது தமிழகத்தின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்கு போதுமானதாகும். ஆனால், அதை சேமித்து வைப்பதற்கான ஆர்வமும், பொறுப்புணர்வும் நம்மிடம் இல்லாதது தான் இன்றைய நிலைக்குக் காரணமாகும்.
பா.ம.க.வின் துணை அமைப்பான பசுமைத் தாயகம் 2002ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களை சிறப்பு விருந்தினராக கொண்டு நீர்வள மேலாண்மைக்கான மாநாட்டை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் நடத்தியது. அதில் மழைநீர் சேமிப்புக்கான திட்டம் குறித்து வலியுறுத்தப்பட்ட நிலையில், அடுத்த சில மாதங்களில் மழைநீர் சேமிப்புத் திட்டத்தை அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தினார். அதன்பயனாக தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. ஆனால், அதன்பின் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசும், மக்களும் காட்டிய அலட்சியம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் கிட்டத்தட்ட வறண்டு விட்டது.
தமிழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் 3 நாட்களில் மட்டும் சென்னையில் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. சென்னை முழுவதும் மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தால், அந்த மழைக்கு பல டி.எம்.சி. நீர் சேமிக்கப்பட்டிருக்கும். அது சென்னைக்கு பல மாதங்களுக்கு குடிநீரைக் கொடுத்திருக்கும். ஆனால், போதிய அளவு மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால், பெய்த மழையில் பெருமளவு நீர் வீணாக கடலில் கலந்தது. வழக்கமாக பெய்யும் மழையில் 40% தண்ணீர் கடலில் கலக்கிறது; 35% ஆவியாகி விடுகிறது. மீதமுள்ள நீரில் 14% பூமிக்குள் உறிஞ்சப்படுகிறது. 10% மண்ணில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. ஆனால், சென்னை போன்ற கான்க்ரீட் காடுகளில் அதிகபட்சமாக 5% கூட பூமியால் உறிஞ்சப்படுவது இல்லை. 95% நீர் வீணாக கடலில் தான் கலக்கிறது.
இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி ஊராட்சித் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மழைநீர் சேமிப்பு என்பது வீட்டளவில் தொடங்கி நாட்டளவில் செயல்படுத்தப்பட வேண்டிய அவசியமான திட்டமாகும். அதன்மூலம் தான் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும். வீடுகளில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும். இதை உணர்ந்து மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மழைநீர் சேமிப்பை தமிழகம் முழுவதும் தீவிர இயக்கமாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
jamaJun 19, 2019 - 03:04:40 PM | Posted IP 162.1*****
நீங்கெல்லாம் தலைவர்கள் என்ற போர்வைக்குள் இருக்கும் வரை இங்கு இது போன்ற பல இன்னல்கள் மக்கள் சந்திக்கவேண்டியதாயிருக்கும் என்பதை அறிவோம்.
சாமிJun 18, 2019 - 09:24:11 AM | Posted IP 162.1*****
ராமதாஸ் உண்மையை சொல்கிறார் - ஒன்று நினைவில் கொள்ளவேண்டும் - இதேமாதிரி ஒரு கோடைகாலம் - இருபது மணிநேரம் தினமும் கரண்டு இல்லாமல் தவித்தோம் -
சாமிJun 17, 2019 - 08:37:56 PM | Posted IP 162.1*****
உங்களுக்கு பெட்டி கிடைத்து விட்டது. அதனால் பெருசா தெரியாது
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் அமைதியாக முடிந்தது சட்டசபை தேர்தல்: 72 சதவீதம் வாக்குப்பதிவு
புதன் 7, ஏப்ரல் 2021 11:41:50 AM (IST)

வேட்பாளர்களுக்கு கரோனா பரிசோதனையைக் கட்டாயமாக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி
செவ்வாய் 30, மார்ச் 2021 4:21:14 PM (IST)

கொள்ளையடிப்பதற்காக ஆட்சிக்கு வரத் துடிக்கறார்கள்: திமுக மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கு!!
திங்கள் 22, மார்ச் 2021 11:55:23 AM (IST)

கரோனா காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதில்
புதன் 17, மார்ச் 2021 5:17:03 PM (IST)

மு.க.ஸ்டாலின், சீமான், கமல்ஹாசன் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்களின் சொத்து மதிப்பு!!
செவ்வாய் 16, மார்ச் 2021 3:48:50 PM (IST)

வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி; அனைவருக்கும் வாஷிங்மெஷின் : அதிமுக தேர்தல் வாக்குறுதி
ஞாயிறு 14, மார்ச் 2021 6:45:12 PM (IST)

ravananJun 19, 2019 - 06:13:35 PM | Posted IP 108.1*****