» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நல்லவர்களை இறைவன் சோதிப்பான்; ஆனால் கைவிட மாட்டான் : ரஜினி பாணியில் ஓபிஎஸ் பேச்சு

செவ்வாய் 4, ஜூன் 2019 11:36:43 AM (IST)

நல்லவர்களை இறைவன் சோதிப்பான்; ஆனால் கைவிட மாட்டான்  என ரஜினி பேசிய புகழ்பெற்ற வசனத்தை திமுகவுக்கு எதிராகப் பயன்படுத்தினார் துணை முதல்வர் ஓபிஎஸ்.

அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று (ஜூன் 3) சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென நிகழ்ச்சிக்கு வராத நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நிகழ்ச்சியைத் தலைமையேற்று நடத்தினார். 

விழாவில் பேசிய பன்னீர்செல்வம், "அதிமுக நடத்துகிற இப்தார் விருந்து சம்பிரதாய நிகழ்ச்சி அல்ல; ஒரு சரித்திர நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியைத் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து நடத்தியவர் மாண்புமிகு ஜெயலலிதா. அவர் காட்டிய வழியில் அந்த அறநெறியில்தான் இன்று நாம் நோன்பு நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறோம். ஒவ்வோர் அரிசியிலும் அது யாருக்கு செல்ல வேண்டுமோ, அவர்கள் பெயரை அல்லா எழுதியிருப்பார் என்று சொல்கிறது இஸ்லாம். 

தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி குடும்பங்களுக்கு விலையில்லா அரிசி கொடுத்து, அது யாருக்கு செல்ல வேண்டும் என்பதை குடும்ப அட்டைகளில் எழுதிவைத்தார் ஜெயலலிதா. அவர் இருந்தவரை கொடுத்துக்கொண்டே இருந்தார். இன்று அவர் ஆட்சியில் அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். புனித ஹஜ் யாத்திரைக்கு மானியம், உலமாக்கள் ஓய்வூதிய உயர்வு, இஸ்லாமிய இளைஞர்கள் சுய தொழில் தொடங்க நிதி உதவி, நாகூர் கந்தூரி விழா, மாவட்டம் தோறும் முஸ்லிம் பெண்களுக்கு உதவி மையங்கள் என முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏராளமான நன்மைகளைச் செய்துள்ளார் ஜெயலலிதா” என ஜெயலலிதா புகழ் பாடியவர் எடப்பாடி பழனிசாமி பெயரைப் பெரிதாக உச்சரிக்கவில்லை.

தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், "பொய்யைக் கூட உண்மை என்று நம்பி விடுகிற வேதனையான விஷயம் சில நேரங்களில் நடந்து விடுகிறது. பாலைவனத்தில் கடும் வெயிலில் தாகத்தோடு நடப்பவர்களுக்குத் தூரத்திலே தண்ணீர் இருப்பது போல தெரியும். தண்ணீர் கிடைக்கும் தாகம் தீரும் என்று நம்பிப் போவார்கள். ஆனால், அங்கே சென்ற பிறகுதான் தெரியும்... அவர்கள் கண்ணுக்குத் தெரிந்தது நீர் அல்ல, கானல் நீர் என்று. என்றுமே தமிழக மக்களின் தாகம் தணிக்கும் தண்ணீர் அதிமுக தான் என்பதை ஒன்பது தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியிருக்கின்றன. தமிழ்நாட்டில் என்றுமே அம்மா ஆட்சி நடைபெற வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் திண்ணமான எண்ணம்.

இதையேற்று அனைத்து சிறுபான்மை மக்களும் இஸ்லாமிய மக்களும் தமிழக அரசுக்கு தங்கள் ஆதரவை தந்தார்கள் என்பதைத்தான் இடைத்தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. இது விஞ்ஞான யுகம். வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக தளங்களில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் கருத்துகளை சுதந்திரமாக எடுத்துக் கூறி வருகின்றனர். அப்படி வலைதளங்களில் தேர்தல் முடிவுகள் பற்றி ஒரு வாசகம் உலாவந்தது. நல்லவர்களை இறைவன் சோதிப்பான்; ஆனால் கைவிட மாட்டான். நம்மை இறைவனும் கைவிடவில்லை. இஸ்லாமிய மக்களும் கைவிட மாட்டார்கள். இன்னொரு வாசகமும் வலைதளங்களில் டிரெண்ட் ஆனது. கெட்டவர்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனால் கைவிட்டு விடுவான்” என்று பாட்ஷா படத்தில் ரஜினி பேசும் புகழ் பெற்ற வசனத்தை திமுகவுக்கு எதிராகப் பயன்படுத்தினார் ஓபிஎஸ்.

"இப்படித்தான் சிலருக்கு தேர்தலில் நிறைய கொடுப்பது போல இறைவன் கொடுத்திருக்கிறான். அது கையை விட்டுப் போய்விடும் என்ற தவிப்பில் சிரிக்கக்கூட முடியாமல் அவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டை ஆளலாம் என்று சிலர் கனவு கண்டு கொண்டிருப்பார்கள் அவர்களின் ஆசை இன்றைக்கும் நிறைவேறாது” என்று பேச்சை முடித்தார் அவர். நிகழ்ச்சியில் அதிமுக சிறுபான்மை பிரிவுத் தலைவர் அன்வர் ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைப்புச் செயலாளர் பொன்னையன், பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பாஜக மாநில சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் ஆசீம் பாட்ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

மனிதன்Jun 4, 2019 - 02:39:08 PM | Posted IP 162.1*****

அருமை ஜல்லிக்கட்டு நாயகரே

இவன்Jun 4, 2019 - 02:25:23 PM | Posted IP 162.1*****

யார் உண்மையான நல்லவங்க என்று கடவுளுக்கு தெரியும் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory