» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மாவட்ட நீதிபதிகள் தேர்வில் மைனஸ் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

வெள்ளி 3, மே 2019 12:23:30 PM (IST)

மாவட்ட நீதிபதிகள் பணிக்கான போட்டித் தேர்வில் மைனஸ் மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மற்றும் புதுவையில் 31 மாவட்ட நீதிபதிகளை நேரடியாக தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வில் தமிழகத்திலிருந்து பங்கேற்ற 3562 பேரும், புதுவையிலிருந்து கலந்து கொண்ட 558 பேரும் ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்துள்ளனர். இத்தேர்வு முடிவுகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கும் நிலையில், தேர்வு முறையில் உள்ள குளறுபடிகள் உடனடியாக களையப்பட வேண்டும்.

மாவட்ட நீதிபதிகள் பணிக்கான போட்டித் தேர்வு என்பது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல்நிலைத் தேர்வை ஏப்ரல் 7&ஆம் தேதி தமிழக அரசும், சென்னை உயர்நீதிமன்றமும் இணைந்து நடத்தின. மொத்தம் 150 மதிப்பெண்களுக்கானத் தேர்வில் பொதுப்பிரிவினருக்கு 60 மதிப்பெண்களும்,   பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 52.5 மதிப்பெண்களும், பட்டியலினத்தவருக்கு 45 மதிப்பெண்களும் தேர்ச்சி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன. ஆனால், ஒட்டுமொத்தமாக தேர்வை எழுதிய 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது தான் மிகவும் சோகமாகும்.

இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அவற்றில் முதன்மையானவை வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததும், தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப்பெண் வழங்கும் முறை கடைபிடிக்கப்பட்டதும் தான். சரியான விடைகளுக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்பட்ட நிலையில், தவறான விடைகளுக்கு அரை மதிப்பெண் வீதம் கழிக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட நீதிபதிகள் பதவிக்கான போட்டித் தேர்வில் மைனஸ் மதிப்பெண் வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்பதால், அதுபற்றி போதிய விழிப்புணர்வு இல்லாமல் கிட்டத்தட்ட அனைவருமே அதிக அளவில் மைன்ஸ் மதிப்பெண்களைப் பெற்று தோல்வியடைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, மாவட்ட நீதிபதிகள் பதவிக்கான போட்டித்தேர்வில் கேட்கப்பட்டிருந்த வினாக்கள் பதிலளிக்க முடியாத வகையில் மிகக் கடினமாகவும், சுற்றி வளைத்தும் தயாரிக்கப்பட்டிருந்தன. அதனால் தான் இந்தத் தேர்வில் கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர்கள், அரசு உதவி வழக்கறிஞர்கள், முன்சீப் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் ஆகியோரால் கூட தேர்ச்சி பெற முடியாமல் போனது. 

சுருக்கமாக கூற வேண்டுமானால் மாவட்ட நீதிபதிகள் தேர்வுக்கான வினாக்கள், தேர்வில் பங்கேற்ற வழக்கறிஞர்களின் திறமையை சோதிக்கும் வகையில் இல்லாமல், வினாத்தாளை தயாரித்தவர்களின் சட்டப்புலமையை வெளிப்படுத்தும் வகையில் தான் அமைந்திருந்தன. உயர்நீதிமன்ற நீதிபதிகளோ, சட்டப்பல்கலைக்கழக  பேராசிரியர்களோ வினாத்தாள்களை தயாரித்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த பல விஷயங்களை மாவட்ட நீதிபதிகள் தேர்வில் பங்கேற்பவர்களும் அறிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதே அடிப்படையில் தவறு ஆகும். பள்ளித்தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மாணவர்களின் கோணத்திலிருந்து தயாரிக்கப்படாமல், ஆசிரியர்களின் கோணத்திலிருந்து தயாரிக்கப்படுவது எந்த அளவுக்கு தவறான அணுகுமுறையோ, அதே அளவுக்கு இந்த அணுகுமுறையும் பெரும் தவறு ஆகும்.

அதேபோல், போட்டித்தேர்வுகளில் மைனஸ் மதிப்பெண் வழங்குவதும் தவறு ஆகும். இதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. போட்டித்தேர்வுகளில் மைனஸ் மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த நீதியரசர் மகாதேவன்,மைனஸ் மதிப்பெண் வழங்கும் முறை ஒரு முறையற்ற செயலாகும். நியாயம், சமத்துவம் மற்றும் சமவாய்ப்பு தத்துவங்களுக்கு இது எதிரானதாகும். போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் சமுதாயத்தின் பல்வேறு நிலைகளில் இருந்து வருபவர்கள் ஆவர். பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று தங்களின் திறமைகளையும், தேர்வு நுட்பத்தையும் அதிகரித்துக் கொள்ளும் சூழலில், அதையே ஏழை மாணவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. எனவே, போட்டித் தேர்வுகளில் மைனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படக்கூடாது என விரிவாக கூறியிருந்தார்.

ஆனால், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை அந்த உயர்நீதிமன்றமே மதிக்காமல் இப்படி ஒரு தேர்வை நடத்தியிருப்பது சரியா? என்பதை நீதிமான்களும், சட்ட வல்லுனர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மாவட்ட நீதிபதிகள் பதவிக்கு நிச்சயம் மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படக்கூடும்; இப்போது தோல்வி அடைந்த பலர் அந்தத் தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட நீதிபதிகளாகக் கூடும். ஆனால், மிக நன்றாக படித்தும் இத்தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவர்களின் மன உறுதி சிதைக்கப்பட்டிருக்கும். அதனால், அவர்கள் எதிர்காலத்தில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதையே தவிர்த்து விடும் வாய்ப்புள்ளது. அப்படி ஒரு எதிர்மறையான விளைவுகளை போட்டித் தேர்வுகள் ஒருபோதும் ஏற்படுத்தி விடக்கூடாது.

எனவே, மாவட்ட நீதிபதிகள் பணிக்கான போட்டித் தேர்வை மைனஸ் மதிப்பெண்கள் இல்லாமல், கடந்த காலங்களில் நடத்தப்பட்டது போன்று மீண்டும் நடத்த தமிழக அரசும், சென்னை உயர்நீதிமன்றமும் முன்வர வேண்டும். அதேபோல், கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் பணிச்சுமையை குறைத்தல், புத்தாக்கப் பயிற்சி அளித்தல், கலந்தாய்வு மூலம் பணியிடமாற்றம் வழங்குதல், நீதிமன்றங்களில் பாதுகாப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அரசும், உயர்நீதிமன்றமும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து

MASSமே 3, 2019 - 04:03:10 PM | Posted IP 172.6*****

நீதிபதிகளுக்கென்று ஒரு தனி கல்வித்திட்டம் கொண்டுவரவேண்டும் .வக்கீல்களை தேர்வூ எழுத சொன்னால் இப்படித்தான் முடிவூ இருக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory