» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

திமுக செயற்குழு ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது: தலைவராக தேர்வாகிறார் மு.க.ஸ்டாலின்?

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 4:54:12 PM (IST)

திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் வரும் 14 -ம் தேதி நடைபெறும் என, அக்கட்சி தலைமைக் அலுவலகம் அறிவித்துள்ளது.

வயது மூப்பின் காரணமாக, கல்லீரல் பிரச்சினை, மூச்சு சம்மந்தப்பட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 27 ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த கருணாநிதி, கடந்த 7 ஆம் தேதி காலமானார். அவருடைய உடல் மறுநாளே மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் பின்புறத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதியின் மறைவால் திமுகவின் தலைமை பதவி காலியாக உள்ளது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றியதிலிருந்து மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் செயல் தலைவராக உள்ளார். இதனால், அவர் திமுகவின் அடுத்த தலைவராக விரைவில் பதவியேற்கலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் வரும் 14 ஆம் தேதி கூடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் செவ்வாய்க்கிழமை, 14 -ம் தேதி காலை 10 மணியளவில் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். அதில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory