» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

இப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே! - ஸ்டாலின் உருக்கமான கடிதம்

புதன் 8, ஆகஸ்ட் 2018 10:36:41 AM (IST)



ஒரே ஒருமுறை இப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். 

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் வாகனத்தை சூழ்ந்து வந்தனர்.

இதற்கிடையே, திமுக தலைவர் கருணாநிதியை ஸ்டாலின் பெரும்பாலும் தலைவர் என அழைப்பது வழக்கம். இந்நிலையில், ஒரே ஒருமுறை இப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்ணீருடன் உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

எங்கு சென்றாலும் சொல்லி விட்டுச் செல்லும்
எனது ஆருயிர்த் தலைவரே, இம்முறை ஏன்
சொல்லாமல் சென்றீர்கள்?

என் உணர்வில், என் உடலில் ரத்தத்தில்,
சிந்தனையில் இதயத்தில் இரண்டறக் கலந்து விட்ட
தலைவா! எங்களையெல்லாம் இங்கேயே
ஏங்கவிட்டு எங்கே சென்றீர்கள்?

"ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு 
கொண்டிருக்கிறான்" என்று நினைவிடத்தில் எழுத 
வேண்டும் என்று 33 ஆண்டுகளுக்கு முன்பே
எழுதினீர்கள். இந்த தமிழ் சமூகத்துக்காக 
இடையறாது உழைத்தது போதும் என்ற மன நிறைவுடன்
புறப்ப்பட்டு விட்டீர்களா?

95 வயதில், 80 ஆண்டு பொதுவாழ்வுடன்
சளைக்காமல் ஓடி, "நாம் தாண்ட வேண்டிய உயரத்தை
யார் தாண்டுவார்கள் பார்ப்போம் என்று போட்டி 
வைத்துவிட்டு மறைந்து காத்திருக்கிறீர்களா?

திருவாரூர் மண்ணில் உங்கள் 95வதுபிறந்தநாளாம்
சூன் 3ஆம் நாள் நான் பேசும்போது, உங்கள்
சக்தியில் பாதியைத் தாருங்கள்என்றேன். அந்த சக்தியையும்,
பேரறிஞர் அண்ணாவிடம் நீங்கள் இரவலாகப் பெற்ற
இதயத்தையும் யாசிக்கிறேன்.
தருவீர்களா தலைவரே!

அந்தக் கொடையோடு, இன்னும் நிறைவேறாத 
உங்கள் கனவுகளையும், இலட்சியங்களையும்
வென்று காட்டுவோம்.

கோடானுகோடி உடன்பிறப்புகளின் இதயத்திலிருந்து
ஒரு வேண்டுகோள்.... ஒரே ஒரு முறை...
"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே...!"
என்று சொல்லுங்கள் தலைவரே! அது ஒரு
நூறாண்டு எங்களை இனமொழி உணர்வோடு
இயங்க வைத்திடுமே!

"அப்பா அப்பா" என்பதை விட, "தலைவரே தலைவரே"
என நான் உச்சரித்ததுதான் என் வாழ்நாளில் அதிகம்.
அதனால் ஒரே ஒருமுறை, இப்போது அப்பா
என்று அழைத்துக்கொள்ளட்டுமா தலைவரே?

கண்ணீருடன்
மு.க.ஸ்டாலின்

இவ்வாறு அதில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த கடிதம் திமுக தொண்டர்களை கலங்கடித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory