» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நான் காகிதப்பூ அல்ல, விதை; விதைத்துப்பாருங்கள் முளைப்பேன்: ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்

புதன் 21, பிப்ரவரி 2018 8:54:34 AM (IST)

"நான் காகிதப்பூ இல்லை. விதை. என்னை நுகர்ந்து பார்த்தால் மணம் இருக்காது. விதைத்துப் பாருங்கள். முளைப்பேன்" என்று மு.க. ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார்.

நடிகர் கமல்ஹாசன் இன்று அரசியல் கட்சி தொடங்குகிறார். மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் இன்று(புதன்கிழமை) நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிமுகம் செய்ய உள்ளார்.

இந்நிலையில் நேற்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் திரண்டு இருந்த தொண்டர்கள், கமல்ஹாசனுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, "எனது வாழ்க்கையின் ஒரு முக்கியமான தருணத்தில் இருக்கிறேன். நாளை (இன்று) காலை ராமேசுவரத்தில் எனது அரசியல் பயணத்தை தொடங்குகிறேன். அங்கிருந்து பரமக்குடி, மானாமதுரை வழியாக மதுரை வருகிறேன். 

இரவு மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, கட்சியின் கொள்கைகளை விளக்குவேன். இந்த கூட்டத்திற்கு அனைவரும் வாருங்கள்" என்றார். அப்போது நிருபர்கள், முதல் அரசியல் கூட்டத்தை மதுரையில் நடத்துவதற்கு என்ன காரணம் என்று கேட்டனர். அதற்கு கமல்ஹாசன், "மதுரையும் எனது ஊர் தான். யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்று பதிலளித்து விட்டு புறப்பட்டார். பிறகு அவர் தங்கம் கிராண்ட் ஓட்டலில் தங்கினார். அங்கு தங்கி விட்டு மாலையில் ராமேசுவரம் புறப்பட்டார். அப்போது கமல்ஹாசனை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அரசியலில் புதிதாக காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால் அது மணம் வீசாது என்று மு.க. ஸ்டாலின் சொல்லி இருக்கிறாரே?

பதில்:- அவர் (ஸ்டாலின்) என்னை சொல்லி இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். அப்படி சொல்லி இருந்தால், ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். நான் பூ இல்லை. விதை. என்னை நுகர்ந்து பார்த்தால் மணம் இருக்காது. விதைத்துப் பாருங்கள். முளைப்பேன்.

கேள்வி:- மதுரை பொதுக்கூட்டத்தில் யார்-யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள்?

பதில்:- கெஜ்ரிவால், பினராயி விஜயன் ஆகியோர் வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் வரவில்லை என்றால் மாற்று செய்வார்கள்.

கேள்வி:- கொள்கை ரீதியாக ஒத்துப்போகும்பட்சத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பேன் என்று சொல்லியும். ஸ்டாலின் காகிதப் பூ என்று சொல்லி இருக்கிறாரே?

பதில்:-நான் தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பேன் என்று எப்போதும் சொல்லவே இல்லையே? என் கொள்கையுடன் யார் ஒத்துப் போனாலும் கூட்டணி வைப்பேன் என்று தான் சொன்னேன். இவ்வாறு அவர் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory