» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஜெயலலிதா கைரேகை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு: மார்ச் மாதம் விசாரணை!!

செவ்வாய் 20, பிப்ரவரி 2018 12:32:44 PM (IST)

ஜெயலலிதா கைரேகை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு, அடுத்த மாதம் (மார்ச்) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் நேற்று அறிவித்தது.

திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த தேர்தலின் போது அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், அப்போதைய முதல்-அமைச்சருமான ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்ததால், அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை ஒதுக்குவதற்கான படிவத்தில் அவர் சுயநினைவோடுதான் கைரேகை வைத்தாரா என்பது சந்தேகமாக இருப்பதாக அந்த மனுவில் கூறியிருந்த அவர், இது தொடர்பான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் ஜெயலலிதா இருந்தபோது எடுக்கப்பட்ட கைரேகை உள்ளிட்ட ஆவணங்களுடன் சிறை கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட போது அவருடைய கைரேகை பெறப்படவில்லை என கர்நாடகா சிறைத்துறை விளக்கம் அளித்ததால், தேர்தல் கமிஷனின் முதன்மை செயலாளர் தங்களிடம் உள்ள ஜெயலலிதாவின் கைரேகை அடங்கிய ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே ஜெயலலிதாவின் கைரேகை குறித்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு தடை விதிக்கக்கோரி ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதா கைரேகை விவகாரம் குறித்த விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், டாக்டர் சரவணன், தேர்தல் கமிஷன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கின் மீதான விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

இந்த நிலையில் டாக்டர் சரவணன் சார்பில் மூத்த வக்கீல் சஞ்சய் ஹெக்டே உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில்  கூடுதல் மனு ஒன்றை புதிதாக தாக்கல் செய்திருப்பதாகவும், எனவே உச்சநீதிமன்றம் ஏற்கனவே விதித்த இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மனுவை அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory