» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவை தேர்தல் வர வாய்ப்பு: இல.கணேசன்

சனி 4, நவம்பர் 2017 12:55:02 PM (IST)

எதிர்வரும் மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் வர அதிக வாய்ப்புள்ளது என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் கூறினார். 

ராஜபாளையத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பங்கேற்க வந்த இல. கணேசன் செய்தியாளர்களிடம் கூறியது:  ஜெயலலிதா இறந்த பின்பு, அவரின் வெற்றிடத்தை நிரப்ப பலர் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் அதை நிரப்ப முடியவில்லை. திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களும் அந்த வெற்றிடத்தை நிரப்ப முயற்சிக்கிறார்கள்.

தமிழக அரசை பின்னால் இருந்து பாஜக இயக்குகிறது என்பது பொருத்தமற்றது; கற்பனையானது. ஊழலற்ற, நேர்மையான அரசு பாஜக அரசுதான். அடுத்த 5 ஆண்டுகளும் மத்தியில் பாஜக ஆட்சி தான் இருக்கும். வரும் டிசம்பர் மாதத்துக்குள் தமிழக அரசு கலைக்கப்படும் என்று டி.டி.வி. தினகரன் கூறி இருப்பது அவரது சொந்தக் கருத்து. எதிர்வரும் மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் வர அதிக வாய்ப்பு உள்ளது என்றார் அவர். 

முன்னதாக அவர், மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது: கமல்ஹாசன் தற்போது தெரிவித்திருக்கும் கருத்துக்காக அவருக்கு கண்டனம் தெரிவிக்கப் போவதில்லை. இந்து மதம் உண்மையிலேயே தீவிரவாதத்தைப் போதிக்கிறதா, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தால் முதன்முதலில் உபயோகிக்கப்பட்ட இந்து தீவிரவாதம் என்ற வார்த்தை சரியானதுதானா என்பது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும்.

எங்கோ ஒரு சில சம்பவங்கள் நடந்துவிட்டது என்பதற்காக இவ்வாறு முத்திரை குத்துவது தவறானது. எனவே, இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. நடிகர் கமல்ஹாசனுக்கு கருத்து கூறுவதற்கு முழு உரிமை உள்ளது. அதேநேரம், அவரது கருத்துக்கு எதிர்தரப்பில் இருந்து பதில் அளிப்பதற்கும் உரிமை இருக்கிறது. ஆனால், அவ்வாறு பதில் அளிக்கும்போது பொறுமை இல்லை, சகிப்புத்தன்மை இல்லையென்று கூறுவது ஏற்புடையதல்ல என்றார் அவர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory