» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்

தாய்ப்பாலை குழந்தைகளுக்கு கட்டாயம் புகட்ட சொல்வதன் காரணம் இதுதான்...!

குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் தரவேண்டும் என்று, குழந்தை பெற்ற பெண்களுக்கு அவர்களது தாய்மார்கள் எடுத்துசொல்வதுண்டு. இது தங்கள் அழகை கெடுத்துவிடும் என பல பெண்கள் மறுக்கின்றனர். 

தாய்ப்பாலில் அப்படி என்னதான் சத்துக்கள் உள்ளன என்று குழந்தை பெற்ற எல்லா பெண்களுக்கும் தெரிந்து வைத்துள்ளீர்களா என்ற கேள்விக்கு ஒரு சிலர் இல்லை என பதில் கூறலாம். தாய்ப்பால் குழந்தைக்குத் தேவையான சத்துக்களை எப்படி ஈடு செய்கிறது? ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் பற்றாக்குறை கூட ஏற்படுமா? என்கிற கேள்விகளுக்கு சென்னை இசபெல்லா மருத்துவமனையில் பணிபுரியும் நியோ நேட்டாலஜிஸ்ட் வைத்தியர் சுப்பிரமணியன் இவ்வாறு பதில் அளிக்கிறார்.

தாய்ப்பாலில் மட்டும்தான் பச்சிளம் குழந்தைக்குத் தேவையான கால்சியமும், பாஸ்பரசும் 2 : 1 என்கிற விகிதத்தில் உள்ளது. இதுதான் குழந்தைக்கு சரியான அளவுகோல். பசும்பாலில் பாஸ்பரஸ் அதிகமாக இருக்கும். ஆனால் அது கால்சியத்துடன் இணைந்து சால்டாக மாறிவிடும். எனவே பசும்பாலில் உள்ள கால்சியம் பச்சிளம் குழந்தைகளுக்குப் பயன்படாத கால்சியமாகவே இருக்கிறது.

அது போலத்தான் பசும்பாலில் கேசின் வே(caesin-whey) புரோட்டீன்தான் இருக்கிறது. பச்சிளம் குழந்தைக்குத் தேவையானதோ வே(whey) புரோட்டீன். இந்த வே(whey) புரோட்டீன் தாய்ப்பாலில் மட்டும்தான் உள்ளது. இந்த புரோட்டீன்தான் பச்சிளம் குழந்தைகளுக்கு பொருத்தமான வகை புரோட்டீன். பசும்பாலில் இப்படி பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் எதுவும் சரிவிகிதத்தில் இல்லாததனால் பச்சிளம் குழந்தையின் மெத்தென்ற குடலில் அலர்ஜி உண்டாகும். இதனால் டயரியா ஆகும். மோஷனில் கண்ணுக்குத் தெரியாமல் பிளீடிங் கூட ஆகும்.

தாய்ப்பாலால் குழந்தைக்கு மேற்சொன்ன பிரச்சனைகள் எதுவும் வராது. தாய்ப்பாலில் உள்ள மைக்ரோ நியுட்ரிஷியன்ஸ் குழந்தைக்குத் தேவையான இன்பெக்ஷன் எதிர்ப்புச் சக்தியைத் தரும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு வயிற்றுவலி வருவதற்கான வாய்ப்புக்கள் மிகமிக குறைவு. பசும்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வயிற்றுவலி வருவதற்கான வாய்ப்புகள் மிகமிக அதிகம்.

வேலைக்குப் போகும் தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது எப்படி?

குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் வரை தாய்க்கு அலுவலகத்திலிருந்து கட்டாய ஓய்வு தேவை. தவிர இந்த மூன்று மாத கால அவகாசம் குழந்தைக்கு தாய்ப்பால் முழுமையாக கொடுக்கவும் பயன்படுகிறது. அதன் பின் தாய் ஒருவாரம், பத்து நாளில் வேலைக்குப் போகவேண்டும் என்றால், தாய்ப்பாலை முன்கூட்டியே எடுத்து வைத்து விட்டால் நான்கு மணி நேரம் வரை அந்த பாலை குழந்தைக்கு கொடுக்கலாம். குளிர்சாதன பெட்டியில் பத்திரமாக வைத்தால் 7 முதல் 10 நாள்வரை தரலாம்.

தாய்ப்பாலை குளிர்சாதனபெட்டியிலிருந்து வெளியில் எடுத்துவைத்து, அது அறையின் சீதோஷன நிலைக்கு சரியாக வந்தவுடன் கரண்டி அல்லது பாலாடையில், குழந்தைக்குப் புகட்டலாம். கண்டிப்பாக பாட்டில் பழக்கப்படுத்தாதீர்கள். அப்படி பாட்டிலில் கொடுத்தால் காதுவலி, அல்லது டயரியா வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.


குளிர்சாதன பெட்டியில் அல்லது பிரீஷரில் வைத்திருக்கும் பாலை எடுப்பதற்குள் குழந்தை அழுகிறதென்றால் எப்படி உடனடியாக பால் ஊட்டுவது? கவலை வேண்டாம், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள். ஒரு சின்ன கிண்ணத்தில் தாய்ப்பாலை விட்டு, அதை கொதிக்கும் தண்ணீர் உள்ள பாத்திரத்தின் உள்ளே வைத்துவிடுங்கள். பால் வெதுவெதுப்பான நிலைக்கு வந்தவுடன் பாலை குழந்தைக்குப் புகட்டுங்கள்.அலுவலக நேரங்களில் கூட, தாய்மார்கள் மார்பகத்தில் ஊறியிருக்கும் தாய்ப்பாலை பம்ப் செய்து எடுத்து அலுவலக பிரிட்ஜில் வைத்து பின் வீட்டில் எடுத்து வந்து வைக்கலாம்.
 

எச்சரிக்கை : தாய்ப்பாலை நேரடியாக சூடு செய்யக்கூடாது.


தாய்ப்பால் இல்லை என்கிற குற்றச்சாட்டு சரியானதா?

ஒரு பெண்ணிடம் தாய்ப்பால் போதுமான அளவு சுரப்பு இல்லை என குற்றம் சுமத்த முடியாது. குழந்தைக்கு தவறான நிலையிலிருந்து பாலூட்டினாலோ, நிப்புள் வலிக்கும்படியாக வெறும் நிப்புளை மட்டும் குழந்தையின் வாயில் வைத்து பாலூட்டினாலோ, தாய்க்கு தாய்ப்பால் ஊறாது. இதற்கு சரியான ஆலோசனை பெற்று, தாய்ப்பால் புகட்டினால் கண்டிப்பாக தாய்ப்பால் ஊறும்.

தாய்ப்பால் போதுமானதாக இல்லை என்றால் மருத்துவர்கள் அவ்வளவு சீக்கிரம் ஒரு பெண்ணுக்கு தாய்ப்பால் ஊற மருந்துகள் பரிந்துரைப்பதில்லை. உணவின் மூலமே இயற்கையாக தாய்ப்பால் ஊறுவதே சரி. உண்மையில் தேவைப்பட்டால், நம் உணவையே மையமாகக் கொண்ட சித்த ஆயுர்வேத மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.

தாய்ப்பாலில் இல்லாத சத்துக்கள் ஏதேனும் உண்டா?

ஆம். ஒரு குறை உண்டு. தாய்ப்பாலில் வைட்டமின் D இல்லை என்பது இரண்டு வருடத்திற்கு முன் நிரூபிக்கப் பட்ட ஆராய்ச்சி உண்மை. எனவே குழந்தை பிறந்த உடனே வெறும் வைட்டமின் D சொட்டுமருந்தும் தரவேண்டும். குழந்தை பெற்ற பெண்களும் இதை கேட்டு வாங்க வேண்டும். இதற்காக நாங்கள் பல விழிப்புணர்வு முகாம்கள் நடத்திவருகிறோம்.

நமது நாட்டு சீதோஷண நிலையில்தான் வெயில் அதிகமாயிற்றே. நமக்கு இயற்கையாகவே வைட்டமின் D கிடைக்குமே என நீங்கள் நினைத்தால் அது தவறு. நமது கருந்தோல் அவ்வளவு விரைவில் வைட்டமின் D யை உள்வாங்கும் தன்மை வாய்ந்ததாக இல்லை என்பதுதான் உண்மை. ஒரு தாய்க்கு வைட்டமின் D பற்றாக்குறையாக இருந்தால், குழந்தைக்கும் வைட்டமின் D பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எனவே குழந்தை பிறந்த உடனே வைட்டமின் D சொட்டுமருந்தும் கொடுத்துப் பழக்கவேண்டும்.


மக்கள் கருத்து

makkalDec 16, 2015 - 06:00:09 PM | Posted IP 122.1*****

welcome

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory