» சினிமா » செய்திகள்

கரோனா வேகமாக பரவுவதால் 31-ம் தேதி வரை சினிமா படப்பிடிப்புகள் ரத்து

ஞாயிறு 16, மே 2021 10:37:59 AM (IST)

கரோனா வேகமாக பரவுவதால் வருகிற 31-ம் தேதி வரை சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. இந்த தகவலை டைரக்டரும், பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தற்போது தமிழகத்தில் மிக அசாதாரணமான நிலைமை நிலவி வருகிறது. கரோனா தொற்று மிக அபாயகரமான நிலையில் உள்ளது. மக்கள் பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டிய காலக்கட்டமாகும். அதுபோல் படப்பிடிப்பில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைமையும் மிக மோசமான நிலையில் உள்ளது.

படப்பிடிப்புக்கு சென்ற உறுப்பினர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். ஒரு உறுப்பினர் படப்பிடிப்புக்குச் சென்றபோது அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அது வீட்டிற்கு வந்தபிறகு அவரது குடும்பம் முழுவதுக்குமே பரவிவிட்டது. தந்தை, தாய், மனைவி ஆகியோருக்கும் கரோனா தொற்று பரவியது. அதில் தந்தை, தாய் எங்கள் சங்க உறுப்பினர் ஆகிய 3 பேருமே பலியாகிவிட்டனர். உறுப்பினரின் மனைவி மட்டுமே வீடு திரும்பினார்.

சென்ற வாரம் தொலைக்காட்சி படப்பிடிப்பு ஒன்றில் கரோனா பரிசோதனை செய்ததில் 26 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு எந்த தயாரிப்பாளர் உதவுவது? என்ற குழப்பமான சூழ்நிலை உள்ளது. தற்போதுள்ள அபாயகரமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு வருகிற 31-ம் தேதி வரை சினிமா படப்பிடிப்புகள் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் அனைத்தையும் ரத்து செய்வது என்று முடிவெடுத்துள்ளோம்.

31-ம் தேதி சம்மேளன செயற்குழு கூட்டம் நடத்தி அன்று உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு முடிவெடுக்கலாம் என்று தீர்மானித்துள்ளோம். கரோனா முதல் அலை வீசியபோது பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் பலர் தாராளமாக உதவி செய்தார்கள். அதுபோல் இப்போதும் தாராள மனதுடன் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தமிழ் திரைப்படத்துறையினர்களையும், அவரது குடும்ப உறுப்பினர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பெருந்தொகையை நன்கொடையாக அளிப்பது மிக சிரமமான விஷயமாகும். அதற்கு பதில் 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் மட்டுமே திரைப்பட தொழிலாளர்களுக்கு ஆயுள் முழுவதும் காப்பாற்றப்படும் என்ற சூழ்நிலை உள்ளது. இதனால் திரைப்பட கலைஞர்களையும், நடிகர்-நடிகைகளையும் தங்கள் வாழ்நாளில் ஒரு 10 நாட்களை ஒதுக்குவதன் மூலம் எங்கள் திரைப்படத்துறை தொழிலாளர்கள் வாழ்வு காப்பாற்றப்படும் என்ற கோரிக்கையை தங்களுக்கு வைக்கிறோம். தற்சமயம் நடிகர் அஜித் 2-வது அலையின் காரணமாக ரூ.10 லட்சம் நன்கொடையாக சம்மேளனத்திற்கு வழங்கியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory