» சினிமா » செய்திகள்

ஈழத் தமிழர்களின் போராட்டத்தைச் சிறுமைப்படுத்தும் காட்சிகள் கிடையாது: 800 படத் தயாரிப்பு நிறுவனம்

வியாழன் 15, அக்டோபர் 2020 12:24:12 PM (IST)முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான "800" படத்தில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தைச் சிறுமைப்படுத்தும் காட்சிகள் கிடையாது என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

133 டெஸ்டுகள், 350 ஒருநாள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடி இலங்கையின் மகத்தான கிரிக்கெட் வீரராக அறியப்பட்டுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்துக்கு 800 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை எடுத்துள்ளதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை எம்.எஸ். ஸ்ரீபதி இயக்குகிறார். 

இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளில் படமாக்கப்படவுள்ளது. அடுத்த வருடத் தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகும். 2021 வருட இறுதியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.  சமீபத்தில் நடைபெற்ற சிஎஸ்கே - ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டத்தின்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதியுள்ளார்கள். #ShameOnVijaySethupathi என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. 

படத்தின் போஸ்டரில், இலங்கையின் தேசியக் கொடியைக் கொண்ட இலங்கை அணி உடையை அணிந்துள்ளார் விஜய் சேதுபதி. இதுபோன்ற காரணங்களால் 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகவேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் 800 படம் தொடர்பான சர்ச்சைகளுக்குப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: முத்தையா முரளிதரன்‌ வாழ்க்கை வரலாற்றில்‌ விஜய்‌ சேதுபதி நடிக்க இருக்கும்‌ 800 திரைப்படம்‌ பல்வேறு வகையில்‌ அரசியல்‌ ஆக்கப்பட்டு வருவதை அறிகிறோம்‌. 800 திரைப்படம்‌ முழுக்க ஒரு கிரிக்கெட்‌ வீரரின்‌ வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர இதில்‌ எந்த வித அரசியலும்‌ கிடையாது.

தமிழகத்தில்‌ இருந்து தேயிலைத்‌ தோட்டக்‌ கூலியாளர்களாக இலங்கைக்குக் குடிபெயர்ந்த ஒரு சமூகத்திலிருந்து வந்த முரளிதரன்‌ எப்படி பல தடைகளைத்‌ தாண்டி உலக அளவில்‌ சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார்‌ என்பதுதான்‌ இத்திரைப்படத்தின்‌ கதையம்சம்‌. இத்திரைப்படம்‌ இளைய சமுதாயத்துக்கும்‌ வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும்‌ தங்கள்‌ வாழ்க்கைப்‌ பயணத்தில்‌ எவ்வளவு தடைகள்‌ வந்தாலும்‌ தடைகளைக்‌ கடந்து சாதிக்க முடியும்‌ என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும்‌ படமாக இருக்கும்‌.

இத்திரைப்படத்தின்‌ தயாரிப்பாளராக ஒன்றை மட்டும்‌ நிச்சயமாகச் சொல்ல முடியும்‌ இத்திரைப்படத்தில்‌ ஈழத்தமிழர்களின்‌ போராட்டத்தை சிறுமைப்படுத்தும்‌ விதத்திலான காட்சியமைப்புகள்‌ கிடையாது. கூடுதலாக இத்திரைப்படத்தில்‌ இலங்கையைச் சேர்ந்த பல தமிழ்‌ திரைத்துறை கலைஞர்கள்‌ மற்றும்‌ தொழில்நுட்ப கலைஞர்கள்‌ பங்குபெற இருக்கின்றனர்‌. அதன்‌ மூலம்‌ இலங்கை தமிழ்‌ திரைத்துறைக் கலைஞர்களுக்கு தங்கள்‌ திறமையை உலக அரங்கில்‌ வெளிக்‌ காட்ட இந்த படம்‌ நிச்சயமாக ஒரு அடித்தளமிட்டுத்‌ தரும்‌ என்பதை நாங்கள்‌ முழுமையாக நம்புகிறோம்‌.

கலைக்கும்‌ கலைஞர்களுக்கும்‌ எல்லைகள்‌ கிடையாது. எல்லைகளைக் கடந்து மக்களையும்‌ மனிதத்தையும்‌ இணைப்பது தான்‌ கலை. நாங்கள்‌ அன்பையும்‌ நம்பிக்கையும்‌ மட்டுமே விதைக்க விரும்புகிறோம்‌ என்று கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory