» சினிமா » செய்திகள்

பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் காலமானார்: பாலிவுட் பிரபலங்கள் இரங்கல்

வியாழன் 30, ஏப்ரல் 2020 12:26:14 PM (IST)

பழம்பெரும் பாலிவுட் நடிகரும், பிரபல நடிகர் ரன்பீர் கபூரின் தந்தையுமான ரிஷி கபூர் இன்று காலமானார். அவருக்கு வயது 67.

மறைந்த நடிகர் ராஜ் கபூரின் 2-வது மகன் ரிஷி கபூர். 1970ஆம் ஆண்டு மேரா நாம் ஜோக்கர் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரிஷி கபூர், 1973-ல் கதாநாயகனாக அறிமுகமானார். பாபி திரைப்படத்தில் டிம்பிள் கபாடியாவுடன் சேர்ந்து நடித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு கடந்த 2000ஆம் ஆண்டு வரை திரைத்துறையில் வெற்றிகளைக் குவித்தார். இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அவர் அறியப்பட்டார். பாலிவுட்டில் பிரபலமாக உள்ள ரன்பீர் கபூர், ரிஷி கபூரின் மகனாவார்.

2018-ல் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் ரிஷி கபூர். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ரிஷி கபூர் அமெரிக்காவின் நியூயார்க்கில் புற்றுநோய் சிகிச்சையை முடித்துக் கொண்டு, மும்பைக்கு திரும்பினார். பிறகு, மும்பையில் புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து வந்த ரிஷி கபூர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இத்தகவலை அவருடைய மகன் ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார். அமிதாப் பச்சனும் ரிஷி கபூரின் மரணத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். உலகமே கரோனா வைரஸைக் கண்டு அச்சப்பட்டிருக்கும் நிலையில் புற்றுநோயால் இரு பெரிய நடிகர்களை அடுத்தடுத்த நாளில் இழந்து தவிக்கிறது பாலிவுட். பாலிவுட் நடிகரான இா்பான் கான் குடல் புற்றுநோய் காரணமாக மும்பையில் நேற்று உயிரிழந்தாா். அவருக்கு வயது 54. இதன்மூலம் அடுத்தடுத்த நாள்களில் புற்றுநோயால் இரு பெரிய நடிகர்களை இழந்துள்ளது பாலிவுட்.

ரிஷிகபூர் மறைவுக்கு  தலைவர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.   பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பன்முகத்தன்மை கொண்ட, அன்பானவர், கலகலப்பானவர். அவர் தான் ரிஷிகபூர். அவர் திறமையின் சக்திமையமாக திகழ்ந்தார். சமூக வலைத்தளத்தில் கூட நாங்கள் பேசி கொண்டதை எப்போதும் நினைத்து பார்ப்பேன். நாட்டின் வளர்ச்சி, சினிமாவை பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டு இருந்தார். அவரது மரணத்தால் கலங்கிபோய் உள்ளேன். அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” என கூறியுள்ளார்.

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ரிஷி கபூரின் மறைவால் 2 தலைமுறை கலைஞர்களுக்கான தொடர்பை இழந்து உள்ளோம். ரிஷி கபூர் நல்ல நடிகர் மட்டுமல்ல. மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசுபவர்” என கூறி உள்ளார். ராகுல்காந்தி வெளியிட்டு உள்ள இரங்கலில் இந்திய சினிமாவுக்கு இது ஒரு பயங்கரமான வாரம், மற்றொரு பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் காலமானார். ஒரு அற்புதமான நடிகர், தலைமுறைகளாக பெரும் ரசிகர்களை கொண்டவர். அவரை இழந்து வாடும்  அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கும் எனது இரங்கல் என கூறி உள்ளார்

1986-ம் ஆண்டு ரிஷி கபூருடன் ‘தோஸ்தி துஷ்மனி’ என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இணைந்து நடித்து உள்ளார். ரிஷிகபூரின் மறைவு குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இதயமே நொறுங்கிவிட்டது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும். என் நெருங்கிய நண்பன் ரிஷிகபூர்” என கூறி உள்ளார். நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘ரிஷி கபூர் மறைவை என்னால் நம்பமுடியவில்லை. அவர் எப்போதும் புன்னகையை தயாராக வைத்து இருப்பார். எங்கள் இருவருக்குள்ளும் பரஸ்பரம் அன்பும் மரியாதையும் வைத்து இருந்தோம். எனது நண்பரை இழந்து விட்டேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்’ என்று தெரிவித்து உள்ளார்.

இதேபோல் நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்‌ஷய்குமார், அஜய் தேவ்கன், சல்மான்கான், அமீர்கான், பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர், இயக்குனர் கரன் ஜோகர், நடிகை டாப்சி, நடிகர்கள் ராதாரவி, சிரஞ்சீவி, மகேஷ்பாபு, நடிகை மஞ்சு வாரியர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். பல இந்திய திரை நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.நேற்று முன்தினம் நடிகர் இர்பான் கான் மரணம் அடைந்த நிலையில், அடுத்த நாளே பழம்பெரும் நடிகர் ரிஷி கபூரின் மறைவு இந்திய சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகா்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory