» சினிமா » செய்திகள்

அமிதாப், ரஜினி உட்பட 12 நட்சத்திரங்கள் இணைந்த கரோனா விழிப்புணர்வு குறும்படம்!

செவ்வாய் 7, ஏப்ரல் 2020 11:25:58 AM (IST)இந்திய சினிமாவின் 12 மிகப் பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள கரோனா விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மம்மூட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், சோனாலி குல்கர்னி, புரொசஞ்சித் சட்டர்ஜி, ஷிவ ராஜ்குமார் மற்றும் தில்ஜித் தோசஞ்ச் ஆகிய 12 இந்திய நடிகர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் குறும்படத்தின் பெயர் FAMILY. வீட்டின் பெரியவராக அமிதாப் பச்சன் வருகிறார். காணாமல் போன அவரது கண்ணாடியை (சன் கிளாஸ்) தேடித் தரச் சொல்லி நீண்ட நேரமாக அவர் குரல் கொடுத்தும் குடும்பத்திலுள்ள யாரும் கண்டுகொள்ளவில்லை. பக்கத்து ரூமில் இருக்கும் தில்ஜித் எழுந்து நீண்ட நேரமாகத் தேடியும் கண்ணாடி கிடைக்கவில்லை. எனவே, வீட்டிலிருக்கும் மற்றவர்களிடம் கேட்கிறார். சோஃபாவில் படுத்து உறங்கிக்கொண்டிருக்கும் ரன்பீர் கபூரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு ஒவ்வோர் அறையாக, அமிதாப் சென்று வந்த இடங்களிலும் கண்ணில் தென்படுபவர்களிடமும் கேட்கிறார்.

ரஜினியிடம் கேட்கும்போது, அணிந்திருக்கும் கண்ணாடியை ஸ்டைலாக கழற்றி எறிந்து, இந்த கண்ணாடி வேணுமா, இல்லை இந்த கண்ணாடி வேண்டுமா எனக் கேட்கிறார். மோகன்லாலிடம் கேட்கும்போது, அவருடைய கண்ணாடியைத் தேட முதலில் என் கண்ணாடியைத் தேடிக்கொடுங்கள் என்கிறார். இப்படியே மம்மூட்டி, ஷிவ ராஜ்குமார், ஆலியா பட் என ஒவ்வொருவராக விசாரித்த பின்னர் கண்ணாடி கிடைக்கிறது. அந்தக் கண்ணாடியை பிரியங்கா சோப்ரா கொண்டு சென்று அமிதாப்பிடம் கொடுத்துவிட்டு, கண்ணாடியைத் தேடியக் காரணத்தையும் கேட்கிறார். அதற்கு அமிதாப் என் கண்ணாடி இப்ப எனக்குத் தேவை இல்லை தான். ஆனால், தேவை இல்லை என்பதால் எங்காவது தொலைத்துவிட்டு, நாளை வெளியில் செல்லும்போது தேவைப்படும்போது தேடவேண்டியதிருக்கும் என்பதால் இப்போதே எங்கிருக்கிறது என கவனிக்கச் சொன்னேன் என்கிறார்.
 
FAMILY குறும்படத்தின் சிறப்பம்சம், கொரோனா நேரத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் குறும்படத்துக்காக யாரும் எந்த இடத்துக்கும் செல்லவில்லை. அவரவர் வீட்டில் இருந்தபடியே, அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் படம்பிடித்து அனுப்ப, அதை எடிட் செய்து குறும்படமாக மாற்றியிருக்கிறார்கள். வீட்டின் பெரியவருக்குக் கண்ணாடியைத் தேடித் தரும் சிறப்பினையோ, விட்டில் இருந்தபடியேகூட எங்களால் சினிமாவை உருவாக்க முடியும் என்று உலகத்துக்குச் சொல்லவே இந்தக் குறும்படத்தை உருவாக்கவில்லை. அந்தக் கண்ணாடி இருந்த இடத்தில், சினிமாவில் தொழிலாளர்களை வைத்து, குறும்படத்தின் கடைசியில் ஒரு மெசேஜை சொல்கிறார் அமிதாப்.

"இதில் நடித்த அனைத்து நடிகர்களும் வீட்டில் இருந்தபடியே தான் நடித்தார்கள். இதற்காக யாரும் வெளியில் வரவில்லை. நாங்கள் யாரும் எந்த மொழித் திரையுலகையும் சேர்ந்தவர்கள் அல்ல. இந்தியத் திரையுலகம் என்பது ஒரு குடும்பம். எங்களுக்கு இன்னொரு குடும்பம் இருக்கிறது. அது சினிமாவுக்காக உழைக்கும் உழைப்பாளிகள். இந்தக் கடினமான சூழல் உங்களை எப்படி பாதிக்கும் என்று எங்களுக்குத் தெரியும். இந்த நேரத்தில் நாங்கள் உங்களை மறந்துவிடப் போவதில்லை. நீங்கள் இல்லாமல் சினிமா இல்லை. உங்களுக்காக நாங்கள் அனைவரும் இணைந்து நிதி திரட்டப் போகிறோம். அதன் உதவியால் இந்தச் சூழலை நீங்கள் சுலபமாகக் கடந்துவரத் தேவையானவற்றை செய்வோம்” என்று கூறுகிறார் அமிதாப்.


உலகின் சிறந்த 100 விளம்பரப் பட இயக்குநர்களில் ஒருவராக அட்வர்டைஸ் ஏஜ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரசூன் பாண்டே இயக்கியுள்ள இந்தக் குறும்படத்தை உருவாக்க கல்யாண் ஜுவல்லர்ஸ், சோனி டெலிவிஷன் நிறுவனம் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் உதவியிருக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory