» சினிமா » செய்திகள்

வழிபாட்டு இடங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் : ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள்

புதன் 1, ஏப்ரல் 2020 8:09:41 PM (IST)

மத வழிபாட்டு இடங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியா முழுக்கவே பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயுள்ளனர். இந்த கரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக திரையுலக பிரபலங்கள் பலரும், பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். மேலும், கரோனா வைரஸை கட்டுப்படுத்த இரவு, பகலாக உழைத்து வரும் மருத்துவர்கள், காவல்துறையினரைப் பலரும் பாராட்டி வருகிறார்கள். 

தற்போது இது தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "அன்பார்ந்த நண்பர்களே, சுயநலமின்றி, தைரியமாக மருத்துவமனைகளில் வேலை செய்து கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றி சொல்லவே இந்த செய்தி. இந்த மோசமான தொற்று பரவிக்கொண்டிருக்கும் சமயத்தில் அவர்கள் இதைக் கையாள எவ்வளவு தயாராக இருக்கிறார்கள் என்று பார்க்கும்போது மனது நிறைந்துவிட்டது. நம் உயிரைக் காப்பாற்ற அவர்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர்.

உலகைத் தலைகீழாக மாற்றியுள்ள இந்த கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு எதிராக நாம் நம் வித்தியாசங்களை மறந்து ஒன்றிணையும் நேரமிது. மனிதம், ஆன்மிகம் ஆகியவற்றின் அழகைச் செயலில் கொண்டு வரும் நேரம் இது. நமது அண்டை வீட்டில் இருப்பவர்களுக்கு, மூத்த குடிமக்களுக்கு, வசதி வாய்ப்பில்லாதவர்களுக்கு, புலம் பெயர்ந்த பணியாளர்களுக்கு உதவுவோம்.

கடவுள் உங்கள் மனதில் இருக்கிறார் (அதுதான் மிகப் பரிசுத்தமான கோயில்). எனவே மத வழிபாட்டு இடங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல. அரசாங்கத்தின் அறிவுரையைக் கேளுங்கள். சுய தனிமையில் சில வாரங்கள் இருந்தால் பல வருடங்கள் ஆயுள் கிடைக்கும். இந்த தொற்றைப் பரவி சக மனிதருக்குத் தீங்கு ஏற்படுத்தாதீர்கள். இந்த கிருமி உங்களிடம் இருக்கிறது என்பதைக் கூட உங்களுக்கு எச்சரிக்காது. எனவே உங்களுக்குத் தொற்று இல்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இது புரளிகளைப் பரப்பி இன்னும் பதட்டத்தையும் கவலையையும் பரப்பும் நேரம் அல்ல” இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory