» சினிமா » செய்திகள்

கமல் 60 திரையுலக பாராட்டு விழா: ரஜினி பங்கேற்கிறார்!

வியாழன் 31, அக்டோபர் 2019 4:07:48 PM (IST)

நடிகர் கமல் ஹாசனின் 60 ஆண்டு திரையுலகப் பயணத்தை விமரிசையாகக் கொண்டாடும் வகையில், 3 நாள்களுக்குப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. 

இதற்கான அறிவிப்பை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் ரஜினி பங்கேற்கிறார். இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நவம்பர் 7 அன்று கமல் ஹாசனின் பிறந்தநாள். அதோடு, கமலின் தந்தை ஸ்ரீனிவாசனின் நினைவு நாள். எனவே தனது சொந்த ஊரான பரமக்குடியில் தந்தையின் உருவச் சிலையைத் திறக்கவுள்ளார் கமல். காலை 10.30 மணி முதல் 11 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கமல் ஹாசனின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள்.

நவம்பர் 8

ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ் கமல் நிறுவனத்தின் அலுவலகத்தில் காலை 9.30 மணிக்குத் தனது குரு மறைந்த கே. பாலசந்தரின் உருவச் சிலையை கமல் திறக்கவுள்ளார். இந்த விழாவில் கே.பி.யின் குடும்ப உறுப்பினர்கள், திரையுலகக் கலைஞர்கள், செய்தியாளர்கள் போன்றோர் கலந்துகொள்வார்கள். அன்று மதியம் 3.30 மணிக்கு சத்யம் திரையரங்கில் கமலின் ஹே ராம் படம் திரையிடப்படுகிறது. திரையிடலுக்குப் பிறகு கமலுடன் படம் குறித்த உரையாடல் நடைபெறும். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில் அதே அரங்கில் சிறப்பு உரையை நிகழ்த்துவார் கமல் ஹாசன். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொள்வார்கள். 

நவம்பர் 9

கமல் ஹாசன் - உங்கள் நான் - 60 மகத்தான வருடங்கள் நிகழ்வை இளையராஜா தொடங்கி வைக்கிறார். கமலைப் பாராட்டும் வகையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி., கமல் உள்ளிட்ட பலர் பாடுகிறார்கள். கமலுடன் 44 ஆண்டுகள் நட்பைக் கொண்டுள்ள ரஜினி காந்த் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டார்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். கமலுடனான அனுபவங்கள் குறித்து அவர்கள் மேடையில் பகிர்ந்துகொள்வார்கள். உங்கள் நான் நிகழ்ச்சி, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory