» சினிமா » செய்திகள்

நடிகர் கிரேஸி மோகன் மறைவு : கமல்ஹாசன் இரங்கல்

திங்கள் 10, ஜூன் 2019 4:11:56 PM (IST)

நாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று பன்முகம் கொண்ட கலைஞர் கிரேசி மோகன் இன்று (ஜூன் 10) மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 66.

இன்று மதியம் 2 மணியளவில் காலமானார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் 2 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது.

மோகன் ரங்காச்சாரி என்ற இயற்பெயர் கொண்ட கிரேஸி மோகன் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றவர். இவர் 1979ஆம் ஆண்டு தனது கிரேஸி கிரியேஷன் என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார். கே.பாலசந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். கமல்ஹாசன் நடிப்பில் வெற்றியடைந்த பெரும்பாலான காமெடிப் படங்களின் பின்னணியில் கிரேஸி மோகன் பணியாற்றியுள்ளார். சதிலீலாவதி, காதலா காதலா, அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, தெனாலி, பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா, பஞ்ச தந்திரம் உள்ளிட்ட பல படங்களின் திரைக்கதை, வசனம் ஆகியவற்றில் பணியாற்றியதோடு நடிக்கவும் செய்துள்ளார். தொலைக்காட்சித் தொடர்களிலும் பணியாற்றியுள்ளார்.

பிரபல வசனகர்த்தாவும், நகைச்சுவை நடிகருமான கிரேஸி மோகன் இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், நண்பர் கிரேசி மோகன் அவர்கள் மீது நான் பொறாமைப்படும் பலவற்றில் மிக முக்கியமான விஷயம் அவரது மழலை மாறாத மனசு. அது அனைவருக்கும் வாய்க்காது. பல நண்பர்கள் லௌகீகம் பழகிக்கிறேன் பேர்வழி என்று அந்த அற்புதமான குணத்தை இழந்திருக்கின்றனர்.

கிரேசி என்பது அவருக்குப் பொருந்தாத பட்டம். அவர் நகைச்சுவை ஞானி. அவரது திறமைகளை அவர் குறைத்துக் கொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாகத் தன்னைக் காட்டிக் கொண்டார் என்பது தான் உண்மை. பல்வேறு தருணங்களில் சாருஹாசன், சந்திரஹாசன், மோகன்ஹாசன் என்றும் வைத்துக் கொள்ளலாம் என்று பகிரங்கமாக தன் பாசத்தை வெளிக்காட்டியவர். அந்த நல்ல நட்பின் அடையாளமாக, இன்று அவரது சகோதரர் பாலாஜி அவர்களுடன் இணைந்து நண்பர் மோகன் அவர்களின் நெற்றில் கைவைத்து பிரியாவிடை கொடுத்தோம். நட்பிற்கு முடிவு என்பது கிடையாது. 

ஆள் இருந்தால்தான் நட்பா என்ன? மோகன் அவர்களின் நகைச்சுவை அவரது ரசிகர்கள் மூலம் வாழும், அந்த வாழ்விற்கு நானும் துணையிருப்பேன். அவரது குடும்பம் ஒரு அற்புதமான கூட்டுக்குடும்பம். அவர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது, போதாது. இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள அவர்கள் பழகிக் கொள்வதற்கு மனோதிடம் வாய்த்திட வேண்டுகிறேன்’ இவ்வாறு இரங்கல் அறிக்கையில் கூறியிருக்கிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிகில் படத்தின் 3வது பாடல் வெளியீடு

புதன் 18, செப்டம்பர் 2019 6:43:25 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory