» சினிமா » செய்திகள்

அரசியலிலிருந்து விலகுகிறேன்: காயத்ரி ரகுராம் அறிவிப்பு

செவ்வாய் 7, மே 2019 5:19:47 PM (IST)

நடிகையும் இயக்குநருமான காயத்ரி ரகுராம் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான காயத்ரி ரகுராம் 2002ஆம் ஆண்டு வெளியான சார்லி சாப்ளின் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள அவர், யாதுமாகி நின்றாய் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது அவரது செயல்பாடுகள் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியது.

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து செயல்பட்டுவந்த காயத்ரி, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துகளைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுவந்தார். இந்த நிலையில் தான் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

"வெறும் வாக்குவாதமும், மற்றவர்களைக் குற்றம் சொல்வதுமாக அரசியல் இன்று மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது. குழந்தைகள் சண்டை போல உள்ளது. வழிநடத்த முதிர்ச்சியான தலைவர்கள் இல்லை. உருப்படியாக எதுவும் நடப்பதில்லை. மக்கள் என்ன முடிவெடுத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. நம்மால் இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற முடியுமா? எதுவும் நடப்பது போலத் தெரியவில்லை. யாரையும் ஆதர்சமாகப் பார்க்க முடியவில்லை. இப்போதைக்கு எனக்கு அரசியலில் ஆர்வம் குறைந்து வருகிறது. நமக்காக நான் வருத்தப்படுகிறேன். முடிவில் நாம் நகைச்சுவைப் பொருளாகிவிடுகிறோம். இது எனது தனிப்பட்ட கருத்து.

சினிமாவைவிட, அரசியலில் அதிக நடிகர்கள் இருக்கின்றனர். போலியான போராளிகள், போலித் தலைவர்கள், போலித் தொண்டர்கள், போலி உறுப்பினர்கள். இதுதான் கடைசியில் கிடைக்கப் பெறுகிறோம். என்னால் 24 மணி நேரமும் நடித்துக் கொண்டிருக்க முடியாது. நேரம் வரும்போது நான் அர்ப்பணிப்புடனும் உண்மையுடனும் விஸ்வாசத்துடனும் இருப்பேன்.

அரசியல்வாதி என்பது வில்லன் கதாபாத்திரமே. பேராசை, தந்திர புத்தி என எல்லாம் எதிர்மறை விஷயங்களே. நான் இப்போதைக்கு வெளியிலிருந்து அனைத்தையும் பார்த்து, ஆராய்ந்து, இன்னும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். இன்னும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொள்கிறேன். தீவிரமாக இறங்குவதற்கான நேரம் இதுவல்ல. தேவைப்படும்போது நான் செய்கிறேன். இப்போதைக்கு நான் எந்த கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை. இது எனது தனிப்பட்ட முடிவு. அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory