» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உஸ்மான் கவாஜா அபார சதம்: ஆஸி. அணி வலுவான துவக்கம்!

வியாழன் 9, மார்ச் 2023 5:05:15 PM (IST)



இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் உஸ்மான் கவாஜா சதம் அடித்து அசத்த, ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. 4-வது டெஸ்ட் ஆமதாபாத்தில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆஸி. அணியில் மாற்றம் எதுவுமில்லை. இந்திய அணியில் சிராஜுக்குப் பதிலாக ஷமி சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸி. தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட்டும் உஸ்மான் கவாஜாவும் நன்கு விளையாடினார்கள். இதனால் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களைக் கடந்தது ஆஸ்திரேலியா. விரைவாக ரன்கள் குவித்து 7 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த ஹெட், அஸ்வின் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு லபுஷேனை 3 ரன்களுக்கு போல்ட் செய்தார் ஷமி. 

மதிய உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது. கவாஜா 27, ஸ்மித் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். உணவு இடைவேளைக்குப் பிறகு கவாஜாவும் ஸ்மித்தும் நிதானமாகவும் கவனமாகவும் பொறுப்புடனும் விளையாடி இந்திய அணிக்கு நெருக்கடி அளித்தார்கள். 40 ஓவர்களுக்கு மேல் இணைந்து விளையாடி 79 ரன்கள் வரை சேர்த்தார்கள். கவாஜா 146 பந்துகளில் அரை சதமெடுத்தார். 135 பந்துகளை எதிர்கொண்டு 38 ரன்கள் எடுத்த ஸ்மித், ஜடேஜா பந்தில் போல்ட் ஆனார்.

அடுத்து வந்த ஹேண்ட்ஸ்காம்ப் 17 ரன்களில் ஷமி பந்துவீச்சில் போல்ட் ஆனதால் கிரீன் களமிறங்கினார். இவர் விரைவாக ரன்கள் எடுத்து ஆஸி. அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால் முதல் நாளின் கடைசிப் பகுதியில் ஆஸ்திரேலிய அணி இன்னொரு முறை ஆதிக்கம் செலுத்தியது. நிதானமாக விளையாடிய கவாஜா, 15 பவுண்டரிகளுடன் 246 பந்துகளில் சதமடித்து அசத்தினார். கவாஜாவும் கிரீனும் 5-வது விக்கெட்டுக்கு 116 பந்துகளில் 85 ரன்கள் எடுத்துள்ளார்கள். 

ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 104, கிரீன் 49 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்கள்.  ஷமி 2 விக்கெட்டுகளும் அஸ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory