» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

விராட் கோலி விஸ்வரூபம்: முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி

சனி 7, டிசம்பர் 2019 10:42:20 AM (IST)விராட் கோலி, லோகேஸ் ராகுல் அதிரடியிடில் மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. 

இந்தியா-மே.இ.தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் நேற்று இரவு ஹைதராபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து மே.இ.தீவுகள் தரப்பில் லென்டில் சிம்மன்ஸ், எவின் லெவிஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தீபக் சாஹர் பந்துவீச்சில் 2 ரன்களுடன் வெளியேறினார் லென்டில். இதன் பின்னர் லெவிஸ்-பிரான்டன் கிங் இணைந்து இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் விரட்டினர். இதனால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. எவின் லெவிஸ் 4 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் வெறும் 17 பந்துகளில் 40 ரன்களை விளாசி, வாஷிங்டன் சுந்தர் பந்தில் எல்பிடபிள்யு ஆனார். இளம் வீரர் பிராண்டன் 1 சிக்ஸர்,  3 பவுண்டரியுடன் 31 ரன்களை விளாசி ஜடேஜா பந்துவீச்சில் அவுட்டானார். 

அப்போது 3 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களை எடுத்திருந்தது மே.இ.தீவுகள். 4 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 41 பந்துகளில் 56 ரன்களை விளாசிய ஷிம்ரன் ஹெட்மயர், சஹல் பந்துவீச்சில் ரோஹித்திடம் கேட்ச் தந்து அவுட்டானார்.  இது அவர் பதிவு செய்த முதல் டி20 அரை சதமாகும்.  கேப்டன் பொல்லார்ட் 37 ரன்கள் எடுத்த நிலையில் சஹல் பந்தில் போல்டானார். ஜேஸன் ஹோல்டர் 24, தினேஷ் ராம்தின் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை குவித்திருந்தது மே.இ.தீவுகள். இந்திய தரப்பில் சஹல் 2-36, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், ஜடேஜா ஆகியோர் தலா 1விக்கெட்டையும் வீழ்த்தினர். மே.இ.தீவுகளின் 207 ரன்களில் மொத்தம் 15 சிக்ஸர்கள் விளாசப்பட்டன. 

இதையடுத்து 208 என்ற எடுத்தால் வெற்றி என்ற பிரம்மாண்ட இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியை தந்தது. துணை கேப்டன் ரோஹித் சர்மா 8 ரன்கள் எடுத்த நிலையில் கேரி பியரி பந்தில் அவுட்டானார். அதன் பின் லோகேஷ் ராகுல் அடித்து ஆடியதால் ஸ்கோர் உயர்ந்தது. 5-ஆவது ஓவர் முடிவில் 41/1 ரன்களை எடுத்திருந்தது இந்தியா. அதன்பின் லோகேஷ் ராகுல்-கேப்டன் விராட் கோலி இணைந்து சிறப்பாக ஆடி ஸ்கோரை துரிதமாக உயர்த்தினர். இதனால் 10 ஓவர்கள் முடிவில் 90/1 ரன்களை கடந்தது. அபாரமாக ஆடிய லோகேஷ் ராகுல் தனது அரைசதத்தைப் பதிவு செய்தார்.  4 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 40 பந்துகளில் 62 ரன்களை விளாசிய ராகுல், கேரி பியரி பந்தில் பொல்லார்டிடம் கேட்ச் தந்து அவுட்டானார். 

அவருக்கு இணையாக கோலியும் மே.இ.தீவுகள் பந்துவீச்சை பதம் பார்த்தார்.  ஆட்டத்தின் போக்கையே ராகுல்-கோலி இணை மாற்றியது குறிப்பிடத்தக்கது. கேப்டன் விராட் கோலி தனது 23-ஆவது அரைசதத்தைப் பதிவு செய்தார்.   இளம் வீரர் ரிஷப் பந்த் 18 ரன்களுடன் காட்ரெல் பந்துவீச்சில் ஹோல்டரிடம் கேட்ச் தந்து வெளியேறினார். அவருக்கு பின் வந்த ஷிரேயஸ் ஐயரும் நிலைக்காமல் 4 ரன்களுடன் பொல்லார்ட் பந்தில் அவரிடமே கேட்ச் தந்து பெவிலியன் திரும்பினார். 6 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 50 பந்துகளில் 94 ரன்களை விளாசி கேப்டன் கோலியும் களத்தில் இருந்தார். இறுதியில் 18.4 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இந்தியா. மே.இ.தீவுகள் தரப்பில் கேரி பியரி 2-44 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதன் மூலம் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory