» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஷிகர் தவன் விரலில் எலும்பு முறிவு: இந்திய அணியில் ரிஷப் பந்துக்கு வாய்ப்பு?

புதன் 12, ஜூன் 2019 12:32:31 PM (IST)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்து தாக்கி விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால், ஷிகர் தவன் அடுத்த 2 ஆட்டத்தில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவன், லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 109 பந்துகளில் 16 பவுண்டரியுடன் 117 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததுடன், ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்து இடக்கை பேட்ஸ்மேனான ஷிகர் தவனின் இடது கை பெருவிரலை பலமாக தாக்கியது. இதனால் வலியால் துடித்த தவன் சிகிச்சை பெற்று தொடர்ந்து விளையாடினார். ஆனால் அவர் பீல்டிங் செய்ய களம் இறங்கவில்லை. இந்த நிலையில் காயம் அடைந்த ஷிகர் தவனுக்கு ‘ஸ்கேன்’ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு இடது கை பெருவிரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் அடுத்த 2 லீக் ஆட்டத்தில் (நியூசிலாந்து, பாகிஸ்தானுக்கு எதிராக) நிச்சயம் விளையாட முடியாது. 

தவனுக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை மற்றும் காயத்தில் இருந்து அவர் மீண்டு வர எவ்வளவு நாட்கள் பிடிக்கும் என்பது குறித்து மருத்துவ நிபுணர்களிடம் அவருடைய மருத்துவ அறிக்கையை காட்டி ஆலோசனை பெற இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் பாட்ரிக் பர்ஹர்ட் சிறப்பு நிபுணர்களிடம் கருத்து கேட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். டாக்டர்களின் அறிக்கையின் அடிப்படையிலேயே தவன் உலக கோப்பை போட்டியில் தொடர முடியுமா? அல்லது உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறுவாரா? என்பது முடிவாகும்.

தவன் காயம் விவகாரத்தில் நிதானமாக ஆராய்ந்து முடிவு எடுக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏனெனில் அவருக்கு பதிலாக மாற்று வீரர் சேர்க்கப்பட்டால், தவன் காயம் விரைவில் குணம் அடைந்தாலும் உலக கோப்பை போட்டியில் விளையாட முடியாது. அணியில் உள்ள மற்ற எந்தவொரு வீரராவது காயம் அடைந்து வெளியேறினால் தான் தவனை அணியில் மீண்டும் சேர்க்க போட்டியின் டெக்னிக்கல் கமிட்டி அனுமதி அளிக்கும் என்பது விதிமுறையாகும். தற்போது அவரது காயம் குணமடைய 2 வாரம் பிடிக்கும் என்று தெரிகிறது. ஆனாலும் அவர் உலக கோப்பை போட்டியில் முழுமையாக ஆடுவாரா என்பதில் சந்தேகமே நீடிக்கிறது.

ஒருவேளை தவனின் காயம் விரைவில் குணம் அடையாமல் போனால் ரிஷாப் பந்த், அம்பத்தி ராயுடு, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரில் ஒருவர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் (நாளை) தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மாவுடன், லோகேஷ் ராகுல் களம் இறங்குவார் என்று தெரிகிறது. மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். 33 வயதான ஷிகர் தவன் ஐ.சி.சி.யால் நடத்தப்படும் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இதுவரை 20 ஆட்டத்தில் ஆடி 1,238 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதமும் அடங்கும். அவர் காயத்தில் சிக்கி இருப்பது இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory