» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது இந்தியா: பிரதமர் வாழ்த்து

வியாழன் 6, ஜூன் 2019 8:07:33 AM (IST)தென்னாப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 2019 உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது. 

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செளதாம்ப்டன் ரோஸ் பெளலில் நடைபெற்றது.  டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பமே பேரதிர்ச்சி: தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹஷிம் ஆம்லாவை 6 ரன்களுக்கும், குவின்டன் டி காக்கை 10 ரன்களுக்கு அவுட்டாக்கினார் இந்திய நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா. அதன் பின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ், ராகி வேன்டர் டுஸன் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். 10-ஆவது ஓவரின் போது ஸ்கோர் 34/2 ஆக இருந்தது. 

இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஜவேந்திர சஹலின் அபார பந்து வீச்சால் டூபிளெஸ்ஸிஸ் 38 ரன்களுக்கும், வேன்டர் டுஸன் 31 ரன்களுக்கும், டேவிட் மில்லர் 31 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர். ஸ்கோரை உயர்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட பால் டுமினியும் வெறும் 3 ரன்களோடு, குல்தீப் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆனார். 25-ஆவது ஓவரின் போது ஸ்கோர் 100-ஐ கடந்தது. அதன் பின் நிதானமாக ஆடி ரன்கள் எண்ணிக்கையை பெலுக்வயோ உயர்த்தினார். 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 34 ரன்களை எடுத்த அவர், சஹல் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.அப்போது 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களையே எடுத்திருந்தது தென்னாப்பிரிககா.

பின்னர் கிறிஸ் மோரிஸ்-ககிúஸா ரபாடா இணைந்து 8-ஆவது விக்கெட்டுக்கு ரன்களை சேர்த்தனர். 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 42 ரன்களுடன் மோரிஸ், புவனேஸ்வர் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் வெளியேறிய சிறிது நேரத்திலேயே இம்ரான் தாஹிர் ரன் ஏதும் எடுக்காமல், புவனேஸ்வர் பந்தில் ஜாதவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இறுதியில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை எடுத்தது தென்னாப்பிரிக்கா.

228 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய தரப்பில் ஷிகர் தவன்-ரோஹித் சர்மா களமிறங்கினர். எனினும் 8 ரன்கள் எடுத்த நிலையில் தவன், ரபாடா பந்துவீச்சில் டி காக்கிடம் கேட்ச் தந்து வெளியேறினார்.  பின்னர் ரோஹித்-கேப்டன் கோலி இணைந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து. கோலி 18 ரன்களை எடுத்திருந்த நிலையில், பெலுக்வயோ பந்தில், டி காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது 54/2 ரன்களை சேர்த்திருந்தது இந்தியா.  சரிவுக்குள்ளான இந்திய அணியை ரோஹித்-ராகுல் இணை பொறுப்பாக ஆடி மீட்டது. 

ராகுல் அடித்த பவுண்டரியில் 26-ஆவது ஓவரில் ஸ்கோர் 100-ஐ கடந்தது. 42 பந்துகளில் 26 ரன்களை சேர்த்திருந்த ராகுல், ரபாடா பந்துவீச்சில் டு பிளெஸ்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின்னர் தோனியும்-ரோஹித்தும் இணைந்து ஸ்கோரை உயர்த்த முயன்றனர். 35 ஆவது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு  150 ரன்களை எடுத்திருந்தது இந்தியா. ரோஹித் சர்மாவும்-தோனியும் இணைந்து பொறுப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். ரோஹித் சிறப்பாகஆடி தனது 23-ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். 

34 ரன்கள் எடுத்த தோனி, கிறிஸ்மோரிஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார்.  ஆட்டத்தை நிறைவு செய்தார் பாண்டியா: அவருக்கு பின் வந்த ஹார்திக் பாண்டியா அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார். இறுதியில் 47.3 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து 230 ரன்களை குவித்தது இந்தியா. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. ரோஹித் சர்மா 2 சிக்ஸர், 13 பவுண்டரியுடன் 144 பந்துகளில் 122 ரன்களுடனும், ஹார்திக் 15 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். தென்னாப்பிரிக்க தரப்பில் ரபாடா 2-39 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

சஹல், ரோஹித் சர்மா அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். ஏற்கெனவே 2 தோல்விகளால் துவண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி தொடர்ந்து போட்டியில் நீடிக்க வேண்டும் என்றால் இந்த ஆட்டத்தில் கண்டிப்பாக வெல்ல வேண்டும். இந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா பெறும் 3-ஆவது தொடர் தோல்வி இதுவாகும்.

பிரதமர் வாழ்த்து

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வெற்றி கொண்ட இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் களம் இறங்கியதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உலக கோப்பை கிரிக்கெட்டில் தனது பயணத்தை தொடங்கியுள்ள ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் வாழ்த்துகள். இந்த தொடர், நல்ல போட்டிகளையும், விளையாட்டு வீரர்களுக்குரிய உத்வேகத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமையட்டும். ஆட்டங்களில் வெல்லுங்கள்; ரசிகர்களின் இதயங்களையும் வெல்லுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory