» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல்: டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை

சனி 11, மே 2019 10:47:58 AM (IST)ஐபிஎல் 2019 தொடரின் இறுதிப்போட்டிக்கு சென்னை முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பையுடன் மோதுகிறது.

ஐபிஎல் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எட்டு அணிகள் கலந்துகொண்ட தொடரில் மற்ற அணிகளைவிட முன்னிலையில் இருந்துவந்த சென்னை அணியும் மும்பை அணியுமே இறுதிப் போட்டியில் சந்திக்கின்றன. இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் அணி எது என்பதை முடிவு செய்யும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் நேற்று (மே 10) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விசாகப்பட்டினத்தில் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி ரன்கள் சேர்க்கவும் திணறியது. சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான மைதானத்தில் மூன்று சுழலர்களுடன் களமிறங்கிய சென்னை அணிக்கு அந்த உத்தி நல்ல பலனைத் தந்தது. 4 ஓவர்கள் பந்து வீசிய ஹர்பஜன் சிங் 31 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் தனது 150ஆவது விக்கெட்டைப் பதிவு செய்தார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் ப்யூஷ் சாவ்லாவுடன் மூன்றாவது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

டெல்லி அணியில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 25 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். இதில் இரு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். காலின் முன்ரோ 27 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது.

148 என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணி பெரும்பாலும் தோனியை நம்பியே உள்ளது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே தங்களது விக்கெட்டுகளைப் பறிகொடுப்பது தொடர்ந்து விமர்சனங்களுக்குள்ளாகிவந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் வாட்ஸனும், டு ப்ளஸியும் நல்ல அடித்தளத்தை அமைத்தனர். டு ப்ளஸி 39 பந்துகளில் அரை சதமடிக்க வாட்ஸன் 32 பந்துகளில் அரை சதமடித்து வெளியேறினார். பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா 11 ரன்களும் தோனி 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க அம்பத்தி ராயுடு இறுதிவரை ஆட்டமிழக்காமல் 20 ரன்கள் சேர்த்தார். இதனால் 19ஆவது ஓவரிலேயே சென்னை அணி வெற்றியை ருசித்தது.

இதனால் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பையுடன் சென்னை அணி மோதுகிறது. இதுவரை 10 ஐபிஎல் தொடர்களில் பங்கேற்றுள்ள சென்னை அணி எட்டாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைகிறது. நேற்று நடந்த போட்டியின் மூலம் தனது 100ஆவது வெற்றியை அந்த அணி பதிவு செய்துள்ளது. சென்னை, மும்பை இரு அணிகளும் தலா மூன்று முறை கோப்பையை வென்றுள்ளதால் நாளை நடைபெறும் போட்டிக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory