» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரிஷப் பந்த் அதிரடியில் டெல்லி அணி அசத்தல் வெற்றி : முதலிடத்திற்கு முன்னேறியது!!

செவ்வாய் 23, ஏப்ரல் 2019 11:48:33 AM (IST)ரிஷப் பந்தின் அதிரடியான பேட்டிங்கால் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 40-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.

இதன் மூலம் 11 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி 7 வெற்றிகள், 4 தோல்விகள் என மொத்தம் 14 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்தது. கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பின் டெல்லி அணி பட்டியலில் இத்தகைய உயர்வைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 14 புள்ளிகள் பெற்றிருந்தபோதிலும் ரன்ரேட் அடிப்படையில் 2-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள், 7 தோல்விகளுடன் 6புள்ளிகளுடன் உள்ளது. இனி அடுத்துவரும் 4 போட்டிகளையும் வென்றாலும் ப்ளே-ஆப் சுற்றுக்கு செல்வது கடினம்தான். ஏற்குகறைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஐபிஎல் பயணம் முடிவுக்கு வருகிறது. 

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை ரஹானேவிடம் இதுவரை  காணாத விளாசலை நேற்றையஆட்டத்தில் காணமுடிந்தது. கடந்த 2012-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சதம் அடித்த ரஹானே, 7 ஆண்டுகளுக்குப்பின் நேற்று சதம் அடித்தார். ஆனால், ரஹானே அடித்தசதம், ரிஷப்பந்தின் அதிரடியில் பயணில்லாமல் போனது.

ஸ்மித், ரஹானே களத்தில் இருந்தவரை ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் வேகமாகச் சென்றது, இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் கூட்டணி அமைத்தனர், ஸ்மித் நிலைத்திருந்தால், நிச்சயம் 200 ரன்களுக்கு மேல் சென்றிருக்கும். ஆனால் ஸ்மித் ஆட்டமிழந்தபின் ரஹானேவின் ஆட்டத்திலும் தொய்வு ஏற்பட்டது, அடுத்து வந்த வீரர்களும் ஒத்துழைக்காததால், 200 ரன்களைக் கூட எட்டமுடியவில்லை.

192 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் சேர்த்து 4 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணிக்கு கடந்த போட்டியில் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் என்றால் இந்தப் போட்டிக்கு ரிஷப் பந்த். 25 வயதுக்குள்ளான அதிகமான வீரர்களைக் கொண்ட இந்த அணி அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று வருகிறது. ஷிகர் தவண் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை நன்குபயன்படுத்திக் கொண்ட ரிஷப் பந்த் இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் களமிறங்கிய ரிஷப் பந்த் அதன்பின் நிதானமாகவும், நேர்த்தியான ஷாட்களையும் ஆடி 36 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். வழக்கமாக விரைவாக ஆட்டமிழந்து வெளியேறிவிடும் பிரித்வி ஷா, இந்த முறை ரிஷப் பந்துக்கு துணையாக இந்த போட்டியில் விளையாடியது சிறப்பு. இருவரும் சேர்ந்து 84 ரன்கள் சேர்த்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory