» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரஹானே திடீர் நீக்கம்

சனி 20, ஏப்ரல் 2019 4:12:55 PM (IST)

ஐபிஎல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அஜிங்கிய ரஹானே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

ரஹானேவுக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அடுத்துவரும் போட்டிகள் அனைத்துக்கும் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்பார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் கடந்த 2017-ம் ஆண்டு தொடரில் செயல்பட்டார். ஆனால், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார். இதனால், அவருக்கு ஒரு ஆண்டு விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.

இதனால், இந்தியாவில் நடந்த கடந்த ஐபிஎல் தொடரில் இருந்தும் ஸ்டீவ் ஸ்மித்தை ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் நீக்கியது. அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டாரர்  ஸ்மித் மீதான தடை காலம் முடிவு நெருங்கியதும், தற்போது நடந்துவரும் 12-வது ஐபிஎல் சீசனில் விளையாட ஐபிஎல் நிர்வாகம்  அனுமதித்துள்ளது. தற்போது ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.

கடந்த ஆண்டு தற்காலிகமாக கேப்டனாக நியமிக்கப்பட்ட ரஹானே அணியை பிளே ஆஃப் சுற்றுவரை கொண்டு சென்றார். அதனால், இந்த ஆண்டு ஸ்டீவ் ஸ்மித் அணிக்குள் இருக்கின்ற நிலையிலும் ரஹானேவே கேப்டனாக தொடர ராஜஸ்தான் நிர்வாகம் அனுமதியளித்தது.

ஆனால், ராஜஸ்தான் அணியின் செயல்பாடுகள் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு ஐபிஎல் போட்டியில் இல்லை. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 2 வெற்றிகள், 6 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. கடந்த 4 போட்டிகளாக தொடர்ந்து தோல்விகளையை சந்தித்து வருகிறது ரஹானே தலைமை. இதனால் அணிக்கு மாற்றம் தேவை என்பதை உணர்ந்த நிர்வாகம் அதிரடியாக ரஹானாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு ஸ்டீவ் ஸ்மித்தை அமர்த்தியுள்ளது.

இது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்ட அறிவிப்பில், " ஐபிஎல் தொடரை மிகவும் புத்தாக்கமாக, உற்சாகமாக எதிர்கொள்ள நினைக்கிறோம். ராஜஸ்தான் அணிக்கு ஏற்கனவே ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக இருந்தவர் ஆதலால், தற்போது மீண்டும் அணிக்கு கேப்டனாக ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். ரஹானே அணியில் வழக்கம் போல் தொடர்வார். புள்ளிப்பட்டியலில் அடுத்த கட்டத்துக்கு நகர்வதுக்கு ஏதுவாக சிறிய அளவில் அணியின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய நிர்வாகி ஜூபின் பாருச்சா கூறுகையில், "ராயல்ஸ் அணிக்கு ரஹானே எப்போதும் விஸ்வாசமானவர். கடந்த சீசனில் அணியை ப்ளே ஆப் சுற்று வரை கொண்டு சென்றார். ஐபிஎல் போட்டியில் நாங்கள் 2 ஆண்டு இடைவெளிக்குப்பின் நல்ல திருப்பத்துடன் வந்தோம். இப்போது கேப்டன் மாற்றப்பட்டாலும், ரஹானே அணியில் தொடர்ந்து இருப்பார். ஸ்டீவ் ஸ்மித்துக்கு அணியில் உறுதுணையாக இருப்பார் " எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory