» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் திண்டுக்கல்: 2வது சுற்றுக்கு முன்னேறியது கோவை!!

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 10:40:48 AM (IST)டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முதலாவது தகுதி சுற்றில் மதுரை அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நத்தத்தில் (திண்டுக்கல்) நேற்று மாலை நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் சந்தித்தன. ‘டாஸ்’ வென்ற மதுரை கேப்டன் டி.ரோகித் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹரி நிஷாந்த் 57 ரன்களில் (31 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். மதுரை பவுலர்களை திக்குமுக்காட வைத்த விவேக் அரைசதத்தை கடந்து 54 ரன்களில் (25 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்) கேட்ச் ஆனார்.

திண்டுக்கல் அணியின் ரன்ரேட் விகிதம் 10 ரன்களுக்கு குறையாமல் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் 19-வது ஓவரில் மட்டும் அந்த அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் திண்டுக்கல் அணி 200 ரன்களை தொடுமா? என்ற கேள்விகுறி எழுந்தது. ஆனால் இறுதி ஓவரில் ஆர்.ரோகித் கடைசி 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விளாசி 200 ரன்களை கடக்க வைத்தார். 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. ரோகித் 13 ரன்களுடன் களத்தில் நின்றார். இந்த சீசனில் ஒரு அணி 200 ரன்களை கடந்தது இதுவே முதல் முறையாகும்.

அடுத்து மெகா இலக்கை நோக்கி ஆடிய மதுரை பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட முயற்சித்து மளமளவென விக்கெட்டுகளை தாரை வார்த்தனர். திண்டுக்கல் பீல்டர்கள் சில கேட்ச்சுகளை மிக அற்புதமாக பிடித்து அசத்தினர். மதுரை அணி 19.3 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 

இதன் மூலம் திண்டுக்கல் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து, முதல்முறையாக இறுதி சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. திண்டுக்கல் தரப்பில் முகமது 3 விக்கெட்டுகளும், திரிலோக் நாக், அபினவ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். திண்டுக்கல் வீரர் விவேக் ஆட்டநாயகன் விருது பெற்றார். தோல்வி அடைந்தாலும் மதுரை அணிக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது. இதே மைதானத்தில் இன்று நடக்கும் 2-வது தகுதி சுற்றில் மதுரை அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற கோவையுடன் மோத இருக்கிறது.

 கோவை -மதுரை இன்று பலப்பரீட்சை 

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்றில் காரைக்குடி காளையை அடக்கிய கோவை கிங்ஸ் அணி இன்று நடக்கும் 2-வது தகுதி சுற்றில் மதுரை அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நத்தத்தில் அரங்கேறிய வெளியேற்றுதல் சுற்றில், லீக் சுற்றில் 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடித்த கோவை கிங்ஸ்- காரைக்குடி காளை அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த காரைக்குடி கேப்டன் அனிருதா, கோவை அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த கோவை வீரர்கள், எதிரணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் சேர்த்தது. காரைக்குடி வேகப்பந்து வீச்சாளர் ராஜ்குமார் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் களம் இறங்கிய காரைக்குடி பேட்ஸ்மேன்களுக்கு, கோவை பவுலர்கள் பதிலடி கொடுத்தனர். காரைக்குடி அணி 19.4 ஓவர்களில் 113 ரன்களில் சுருண்டு வெளியேறியது. இதன் மூலம் கோவை அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு, 2-வது தகுதி சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றது. கோவை தரப்பில் நடராஜன் 4 விக்கெட்டுகளும், விக்னேஷ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதே மைதானத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு 7.15 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் கோவை கிங்ஸ் அணி, மதுரை பாந்தர்சை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

கருணாநிதி மறைவுக்கு    அஞ்சலி

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி தள்ளி வைக்கப்பட்ட டி.என்.பி.எல். கிரிக்கெட்டின் ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் நத்தத்தில் நேற்று நடந்தது. முதலாவது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதிய போட்டிக்கு முன்பு வீரர்கள் அனைவரும், கருணாநிதியின் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், டி.என்.பி.எல். அலுவலர்கள் அனைவரும் கைகளில் கருப்பு பட்டை அணிந்து துக்கம் அனுசரித்தனர். இதைத்தவிர வழக்கமாக போட்டியின் போது அரங்கேறும் சியர்ஸ் லீடர்சின் நடனம், சினிமா பாடல்கள் ஒலிபரப்புதல் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory