» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

விஜய் ஹஸாரே கோப்பை: 4 தோல்விகளுடன் வெளியேறிய நடப்பு சாம்பியன் தமிழக அணி!

திங்கள் 12, பிப்ரவரி 2018 5:33:25 PM (IST)


விஜய் ஹஸாரே கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனான தமிழக அணி  வரிசையாக 4 தோல்விகளைச் சந்தித்து வெளியேறியது. இதனால் ரசிகர்களிடம் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழக கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளருமான ரிஷிகேஷ் கனீத்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய கிரிக்கெட் சங்கங்களிலேயே தமிழகம் வீரர்களுக்கான சிறந்த கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. தமிழக அணிக்கு விளையாடும் வீரர்கள் கொடுத்து வைக்கப்பட்டவர்கள். ஏனெனில் நான் ராஜஸ்தான், மும்பை உள்ளிட்ட சங்கங்களின் செயல்பாடுகளை நன்கு அறிந்தவன்.

அவ்வகையில் தமிழக கிரிக்கெட் சங்கம், வீரர்களுக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருகிறது. அதற்காக வீரர்கள் யாரும் தங்கள் விருப்பப்படி செயல்பட வேண்டிய அவசியமில்லை. ராஜஸ்தான் சங்கத்தில் பயிற்சியாளர் சொல்லுக்கு மறுபேச்சு கிடையாது. அதுபோல மும்பை அணியில் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் அவர் தனது சுயலாபத்துக்காக செயல்படுகிறார் என்று தெரிந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். களத்தில் சரியாக விளையாடவில்லை என்றால் அவர் இந்திய அணி வீரராக இருந்தாலும் மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டு அடுத்தவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும். அவர்களின் தவறுகள் அந்த தருணத்திலேயே சுட்டிக்காட்டப்படும்.

அதுமாதிரியான நிலைதான் தற்போது தமிழக அணிக்கும் தேவை. தமிழக அணியில் எப்போதுமே திறமையானவர்களுக்கு மட்டும்தான் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. எனவே அதனை ஒவ்வொரு வீரரும் உணர வேண்டும். இந்த விஜய் ஹஸாரே தொடரின் மூலம் தமிழக அணியின் சாதக, பாதகங்கள் அனைத்தும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு அணியின் வளர்ச்சியை மேம்படுத்த முடியும்.

வீரர்களும் தாங்கள் செய்த தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்ள வேண்டும். இது தனிப்பட்ட ஒருவரின் தோல்வி அல்ல, ஒட்டுமொத்த அணியின் தோல்வியாகும். இந்த தோல்விக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். முரளி விஜய் கடைசி நிமிடத்தில் வெளியேறியது, ஆந்திராவுடனான போட்டியில் இருந்து அஸ்வின் விடுப்பு எடுத்துக்கொண்டது போன்ற நிகழ்வுகளை சர்ச்சைகளாக்க விரும்பவில்லை.

தமிழக அணியின் இளம் வீரர்கள் விஜய் மற்றும் அஸ்வினை தங்கள் முன்மாதிரியாகக் கொண்டுள்ளனர். தெரிந்தோ, தெரியாமலோ ஒவ்வொரு வீரரின் செயல்பாடுகளும் வேறுபடும். ஒருசிலர் உள்ளூர் போட்டிகளிலும் முத்திரைப் பதிக்க வேண்டும் என்று விரும்புவர். சிலர் தங்களின் புகழுக்கு அவை தேவையில்லை என்று நினைப்பார்கள். இதுபோன்ற மனநிலை யாரிடமும் இல்லை என்றே நினைக்கிறேன். அவ்வாறு யாருக்காவது இருந்தால் அவர்களுடன் உடனடியாக ஆலோசிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக, தமிழக வீரரும், இந்திய அணியின் துவக்க வீரருமான முரளி விஜய் மும்பையுடனான ஆட்டத்தில் இருந்து விலகுவதாக போட்டி தொடங்குவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பு தான் தெரிவித்தார். இதனால் கடைசி நிமிடத்தில் மாற்று வீரர் களமிறக்கப்பட்டார். தனக்கு ஏற்பட்டுள்ள காயத்தால் பங்கேற்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், இதன் முழுவிவரம் தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தரப்பில் கூறப்படுகிறது. அதுபோல ஆந்திராவுடனான போட்டியில் இருந்து தனக்கு விடுப்பு அளிக்குமாறு அஸ்வின் கூறியுள்ளார். ஆனால், தன்னுடைய விடுப்பு குறித்து முன்கூட்டிய தேர்வுக்குழு, பயிற்சியாளர் மற்றும் வாரியத்திடம் அஸ்வின் அனுமதிபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory