» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

பீதியை கிளப்பும் விபத்து விழிப்புணர்வு தேவையா? நாகர்கோவில் பகுதி பொதுமக்கள் எரிச்சல்!

செவ்வாய் 15, ஜூலை 2014 12:21:36 PM (IST)நாகர்கோவிலில் தனியார் அமைப்பு காவல்துறை உதவியுடன் நடத்திய விபத்து விழிப்புணர்வு பீதியை கிளப்பும் வகையில் இருந்ததால் பொதுமக்கள் எரிச்சல் அடைந்தனர்.

நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகம் நேற்று திடீர் பரபரப்புக்குள்ளானது. இதற்கு காரணம் அந்த அலுவலகம் முன்பு சாலையில் விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி மக்களின் மனதில் ஒருவித பீதியை ஏற்படுத்தி விட்டது என்றே கூறலாம். 

அதுவும் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அறிவிப்பு எதுவும் இன்றி அடுத்தடுத்து வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி விழுவது போலவும் ரத்தக்காயம் அடைந்தவர்களை கண்டு உறவினர்கள் கதறி அழுவது போலவும் சித்தரிக்கப்பட்டு காட்சிகள் அரங்கேற்றப்பட்டன. இந்த காட்சியை கண்ட பொதுமக்கள் பலர் எரிச்சல் அடைந்தனர்.

ஒருபொது இடத்தில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அனுமதித்ததே முதல் தவறு. மாரடைப்பு நோய் உள்ளவர்கள் இந்த காட்சியை கண்டால் விழிப்புணர்வு அடைய மாட்டார்கள். கண்விழிகளை மூடி உயிரைத்தான் விடுவார்கள். நெஞ்சை கசக்கி பிழியும் வகையிலும், ரத்த நாளங்களை நொடியில் உறைய வைக்கும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இப்போது தேவையா என்று அதை பார்த்தவர்கள் கேள்விக்கனை தொடுக்கிறார்கள். அவர்கள் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்.

ஏற்கனவே விபத்து பற்றிய விழிப்புணர்வுகள் எவ்வளவோ இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம் தனியார் அமைப்பும், அதை நடத்தியவர்களும், தொடங்கி வைத்தவர்களும் பேசப்பட வேண்டும் என்பதற்காக தான். மக்களின் விழிப்புணர்வுக்காக அல்ல. விபத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றால் வாகன ஓட்டுனர்களை ஒரு மைதானத்தில் வரவழைத்து இதுபோல் கொடூரமாக சித்தரிக்கும் வகையில் இல்லாமல் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். அல்லது பள்ளி, கல்லூரிகளில் இடைவேளை நேரத்தில் மாணவ, மாணவிகள் மத்தியில் கூட சாதாரணமாக நடத்தி காட்டலாம்.

அதையெல்லாம் விட்டுவிட்டு பரபரப்பையும், பதட்டத்தையும், பீதியையும் ஏற்படுத்தும் வகையில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. நாகர்கோவிலை பொறுத்தவரை முதலில் விபத்து எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று காவல்துறை அதிகாரிகளும், தொண்டு நிறுவன அமைப்பினரும் யோசிக்கவில்லை. நாகர்கோவிலில் சாதாரணமாக நடக்கும் விபத்துக்களை விட அதிகளவு விபத்துக்கள் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளால் தான் விளைகிறது.ஓரம்கட்டப்பட வேண்டிய ஓட்டை உடைசல் பேருந்துகளை வைத்துக்கொண்டு அரசு போக்குவரத்து கழகம் இயங்கி வருகிறது. அந்த பேருந்துகள் தினம்,தினம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடி யாரையாவது உயிர்ப்பலி வாங்குகிறது. இதை கண்டு முதலில் தீர்வு கண்டாலே விபத்தை ஓரளவுக்கு தடுக்கலாம். அதை செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதை விட்டு இதுபோன்ற பீதியை கிளப்பும் விழிப்புணர்வு நடத்துவது பொதுமக்களிடம்  எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது.

இந்த காவல்துறையும், போக்குவரத்து காவல்துறையும், தனியார் அமைப்பி னரும் சிந்தித்து பார்த்து பொதுமக்களை பாதிக்காதவாறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தலாம் என்பது ஒட்டு மொத்த மக்களின் ஏகோபித்த கருத்து. இதை உணர்ந்து அதிகாரிகளும், தொண்டு நிறுவனத்தினரும் செயல்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory