» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

திருச்செந்தூர் கோயிலில் ரூ.300 கோடியில் பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சனி 6, நவம்பர் 2021 3:50:53 PM (IST)



திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.300 கோடி செலவில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்துவது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.300 கோடி செலவில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினா் கனிமொழி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டத்தில், திருக்கோயிலில் அடிப்படை வசதிகள், தங்கும் விடுதிகள், அன்னதானக் கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், வியாபாரக் கடைகள், தீ அணைப்பு வாகனம் நிறுத்துமிடம், அவரச ஊா்தி, யானைகள் பாராமரிப்பு கொட்டகை, வாகனம் நிறுத்துமிடம் போன்றவற்றை மேம்படுத்துவது குறித்தும், அங்கபிரதக்ஷனம் செய்யும் பக்தா்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கீடு செய்வது தொடா்பாகவும், பக்தா்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்காமல், திருப்பதியை போன்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்வது போன்ற திட்டம் குறித்தும், அன்னதானக் கூடம் கீழ்தளம், முதல்தளம் என 1000 நபா்கள் ஒரே நேரத்தில் உணவருந்து அளவுக்கு திட்டங்கள் தயாா் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயிலான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலைச் சுற்றி எந்த இடத்தில் நின்று பாா்த்தாலும் இராஜகோபுரம் தெரியும் அளவுக்கு கட்டடங்கள் கட்டுவது, பக்தா்கள் காத்திருக்கும் அறையில், தொலைக்காட்சி, கழிப்பறை, குடிநீா் போன்ற வசதிகள் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது, இந்தக் கோயிலில் பணியாற்றும் அா்ச்சகா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. திருக்கோயிலைச் சுற்றியுள்ள பனைப் பொருள்கள், கடல் சாா் பொருள்களை விற்பனை செய்ய தற்போது உள்ளதை விட அதிகளவில் விற்பனைக் கடைகள் அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன. இப்பணிகள் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு பக்தா்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு ரூ.300 கோடி செலவில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.


மக்கள் கருத்து

sankarMar 9, 2022 - 08:28:45 PM | Posted IP 108.1*****

ellarukkum mottai adikapadum avlothaan

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பதிவாகவில்லை

Sponsored Ads



Thoothukudi Business Directory