» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நூற்றாண்டு விழா தபால்தலை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்

ஞாயிறு 12, செப்டம்பர் 2021 5:36:51 PM (IST)



தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு விழா தபால் தலையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். 

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, இந்தியாவின் பழமையான மற்றும் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு விழாவினை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். டிஎம்பி வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கே.வி. ராமமூர்த்தி, டிஎம்பி வங்கியின் நிர்வாக குழு உறுப்பினர்கள், அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஜி.நடராஜன். ஐபிஒஎஸ், அரசுத்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளை சிறப்பிக்கும் வகையில், தனித்துவமிக்க டிஎம்பி தபால் தலை மற்றும் ப்ரத்யேக அஞ்சலட்டையை தலைமை விருந்தினரான மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி பரிவர்த்தனைகளான பணம் எடுத்தல், பணம் செலுத்துதல், வங்கி கணக்கு புத்தகங்களை அச்சிடுதல் உள்ளிட்ட சேவைகளை அவர்களுடைய வசிப்பிடங்களிலேயே நேரடியாக பெற உதவும் வகையில் ‘டிம்பி மொபைல் டிஜிலாபி (TMB Mobile DigiLobby) வாகனத்தையும் மத்திய நிதி அமைச்சர் கொடியசைத்து தொடக்கி வைத்தார். 

இதன் பின்னர், கோவிட் 19 வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக, பொது மக்கள் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் டிஎம்பி மற்றும் டைம்ஸ் நெட்வொர்க் இணைந்து மேற்கொள்ளும் ‘நடமாடும் தடுப்பூசி முகாம் (Mobile Vaccination Camp) வாகனத்தையும் மத்திய நிதி அமைச்சர் தொடங்கி வைத்தார். இறுதியாக விழாவில் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை நிறுவனங்களுக்கு கடனுதவிகளை மத்திய நிதி அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன், "வெற்றிகரமாக 100 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்கும், அவ்வங்கியைச் சார்ந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இது ஒரு சாதாரண சாதனை அல்ல. பல ஆண்டுகள் செயல்பட்ட நிறுவனங்களும், அமைப்புகளும் கூட தங்களுடைய தங்களது வெற்றிப்பாதையை இழந்திருக்கின்றன. ஆனால் மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பழமையான பாரம்பரியமிக்க வங்கித்துறையில் 100 ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்கு எனது பாராட்டுகள்.”

"டிஎம்பி தமிழ்நாடு வங்கித் துறைக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளது. அரசாங்கத்தின் தொடர்ச்சியான உடனடி நடவடிக்கைகளுக்குப் பிறகு இன்று இந்தத் துறை நிலையாக உள்ளது. பொதுத்துறையில் உள்ள பல வங்கிகள் இப்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அதே நேரத்தில், டிஎம்பி இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், சிறப்பாக செயல்பட்டு நன்றாக நிர்வகித்து துறை சார்ந்த பிரச்சனைகளில் பயணம் செய்தது. மேலும், வங்கி டிஜிட்டல் மயமாக்கப்பட்டு சரியான பாதையில் நகர்ந்துள்ளது. வங்கி தொழில்நுட்பம் மிக உயரத்தை எட்டியுள்ளது, கிராமப்புறங்களில் கிளைகளைத் திறக்காமல் டிஜிட்டல் மயமாக்கலின் மூலம் நீங்கள் வங்கிச் சேவைகளை வழங்க முடியும்.”

"நமது பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து தரப்பு மக்களும் வங்கிச் சேவையைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அது ஜீரோ பேலன்ஸ் கணக்காக இருக்கவேண்டுமென்பதை தெளிவாக அறிந்திருந்தார், இன்று, இந்தியாவின் அனைத்து குடிமக்களும் வங்கிச் சேவையை பயன்படுத்துவதை 'ஜந்தன் யோஜனா' சாத்தியமாகியுள்ளது. இதன்மூலம் ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு மற்றும் ரூபே கார்டுடன் கூடிய காப்பீடும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து குடிமக்களும் பேக்கிங் செயல்முறைகள் மற்றும் அனைவருக்குமான நிதி சேவைகள் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஏழைகளுக்கும், அனைத்து தரப்பினருக்குமான நிதிச்சேவைகளை வழங்குவதற்கு பிரதமர் மந்திரி ஜன்தன் யோஜனா தொடங்கப்படாவிட்டால் அது சாத்தியமாகி இருக்காது.”

நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான கே.வி. ராமமூர்த்தி, பேசுகையில், "டிஎம்பி கடந்த 99 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து பங்குதாரர்களுக்கும் எப்போதும் உரிய மதிப்பை அளித்து வந்துள்ளது. வரலாற்றில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளான தேச விடுதலை, எமர்ஜென்சி, பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் அண்மையில் உருவான பெருந்தொற்றான கோவிட் 19 உள்ளிட்ட பல்வேறு சோதனையான கால கட்டங்களை வங்கி வெற்றிகரமாக சந்தித்து வந்துள்ளது. 

வாடிக்கையாளர்கள் கோவிட் 19 பெருந்தொற்றை சமாளிக்கும் வகையில், அவர்களுக்கு உதவும் விதமாக இன்றைய தேதிவரை 13,753 வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,567.62 கோடி நிதியை வழங்கியுள்ளது. டிஜிட்டல் பேங்கிங் யுகத்தில், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவையை வழங்கும் நோக்கத்துடன் பணப் பெட்டகம் மற்றும் கரன்சி நோட்டுகளை கையாளுதல், அடுக்கி கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பத்தை தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் தனியார் வங்கி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியாகும். 

எங்களது நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களையொட்டி சிறப்பு டிஎம்பி தபால் தலை மற்றும் சிறப்பு அஞ்சலட்டை வெளியீட்டு நிகழ்வுடன் தொடங்கி, நாங்கள் பல்வேறு முன்னெடுப்புகளை தொடங்கியுள்ளோம். இதையடுத்து, ‘டிம்பி மொபைல் டிஜிலாபி ’(TMB Mobile DigiLobby’)-யை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். மேலும் பொது மக்களுக்கு உதவும் வகையில், ‘நடமாடும் தடுப்பூசி முகாம் ’(Mobile Vaccination Camp) வாகனத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் நிதியுதவிகளை வழங்குவது எங்களது ஒரு வருட தொடர் முயற்சிகளில் முதன்மையானதாக இருக்கும்” என்றார்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி குறித்து: நாடு முழுவதும் 16 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் முழுவதும் கணிணிமயமாக்கப்பட்ட மற்றும் ஒன்றொடொன்று இணைக்கப்பட்ட 509 கிளைகளை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதற்காக பணப் பெட்டகம் மற்றும் பணம் கையாளுதல் பிரிவில் தென்னிந்தியாவில் முதன்முறையாக ரோபோவை அறிமுகப்படுத்திய முதல் தனியார் வங்கி டிஎம்பி. 

கடந்த 2020 ஆண்டோடு ஒப்பிடுகையில் 2021-ம் நிதியாண்டு வங்கியின் நிகர லாபம் ரூ.408 கோடியிலிருந்து ரூ.603 கோடி ஆக 48 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மொத்த முன்வைப்பு தொகை கடந்த 2020 நிதியாண்டில் ரூ.28,236 கோடியிலிருந்து 2021-ம் நிதியாண்டில் ரூ.31,541 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த முதலீடு கடந்தாண்டில் ரூ.36,825 கோடியிலிருந்து நடப்பாண்டில் ரூ.40,970 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த வர்த்தகம் கடந்த 2020 நிதியாண்டில் ரூ.65,061 கோடியிலிருந்து 11 சதவீதம் உயர்ந்து நடப்பாண்டில் ரூ.72,511 கோடியாக உயர்ந்துள்ளது. 

விழாவில் வங்கியின் முன்னாள் டைரக்டர் சிஎஸ் ராஜேந்திரன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். விழாவில் வங்கி சேர்மன் அண்ணாமலை உதவி சேர்மன் சிதம்பரநாதன், பொது மேலாளர்கள் சூரியராஜ், இன்பமணி, துணை பொது மேலாளர் அசோக் குமார், மற்றும் எம்ஆர் காந்தி எம்எல்ஏ, வஉசி கல்லூரி தாளாளர் சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் வீரபாகு,  நாடார் சங்க தலைவர்கள் கரிக்கோல்ராஜ், என்ஆர் தனபாலன், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகநாதன், பாரதியை  ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பால்ராஜ், பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பொதுச்செயலாளர் பிரபு, மாநில செயற்குழு உறுப்பினர் எம்ஆர் கனகராஜ், மான்சிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து

JacobOct 22, 2021 - 01:13:58 PM | Posted IP 162.1*****

Ammaiyar kal vaitha idam uruppattatha sarithiram illai.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பதிவாகவில்லை

Sponsored Ads



Thoothukudi Business Directory