» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

கடனா – கல்லாறு - வைப்பாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படுமா?

சனி 19, ஜூன் 2021 4:47:13 PM (IST)தாமிரபரணி ஆற்றில் கடனா – கல்லாறு - வைப்பாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்,  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி, கடனாநதி, சிற்றாறு ஆறுகளையும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உப்போடை எனும் கோரம்பள்ளம் ஆறு, கல்லாறு எனும் மலட்டாறு ஓடைகளையும் இணைக்கும் வெள்ளநீர் கால்வாய் திட்டத்துக்கு மட்ட அளவு, மண் தன்மை ஆய்வு செய்வதற்காக 2019 – 2020ஆம் ஆண்டு பொதுப்பணித் துறை மானியக்கோரிக்கையில் 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆய்வுகளின் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு தாமிரபரணி கால்வாய் திட்டத்தின் மூலம் தண்ணீர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் எந்தத் தேர்தல் வந்தாலும் வேட்பாளர்களின் தேர்தல் வாக்குறுதியில் முதலில் இடம்பெறுவது ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் தொகுதியில் தாமிரபரணி கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என்பதுதான். நாடாளுமன்றத் தேர்தலின்போது டாக்டர் தமிழிசை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டார். இப்போதைய எம்.பி கனிமொழி தேர்தல் பரப்புரையில் வாக்குறுதி கொடுத்தார். ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் இடைத் தேர்தலின்போதும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அனைவருமே தாமிரபரணி திட்டத்தை வாக்குறுதியாகக் கொடுத்து வாக்குகள் பெற்றனர்.

தாமிரபரணி ஆற்றிலிருந்து ஓட்டப்பிடாரம் பகுதிகளுக்குத் தண்ணீர் கொண்டு வரவேண்டுமென்பது பல ஆண்டுக்கால கோரிக்கை. ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் முத்தையா, ராஜமன்னார், டாக்டர் கிருஷ்ணசாமி, சிவபெருமாள், மோகன், சுந்தரராஜ் முதல் இன்றைய எம்.எல்.ஏ. சண்முகையா வரை சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த கோ.சி.மணி, பொதுப்பணித் துறை அமைச்சர்களாக இருந்த துரைமுருகன், ராமலிங்கம் உள்ளிட்டோர் கொம்பாடி ஓடை, புதியம்புத்தூர் மலர்குளம், சவரிமங்கலம் உப்போடை பகுதிகளில் ஆய்வு நடத்தியுள்ளனர். 

சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவினரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும், மாவட்ட ஆட்சியரிடத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டில் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தாமிரபரணி, நம்பியாறு இணைப்புத் திட்டத்தை அறிவிக்கும்போது, தூத்துக்குடி மாவட்டத்தின் வடபகுதிகளுக்கும் தாமிரபரணியைக் கொண்டு செல்ல ஆய்வு நடத்தப்படும் என்றார்.

கடந்த 2011ஆம் ஆண்டில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் கிருஷ்ணசாமி சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தபோது, பதில் அளித்த அன்றைய முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா உள்மாநில ஆறுகளை இணைக்கும் திட்டத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

தமிழக அரசின் சார்பில் செல்வி ஜெ.ஜெயலலிதா வெளியிட்ட தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 இரண்டாம் பகுதியில் தாமிரபரணி, கடனாநதி, சிற்றாறு, உப்போடை, கல்லாறு இணைப்புத் திட்டம் இடம்பெற்றது. 2012 முதல் 2022க்குள் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று அன்றைய முதல்வர் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக இன்றைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இத்திட்டத்துக்கான ஆய்வை நடத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால், அத்திக்கடவு அவினாசி திட்டம், மேட்டூர் சரபங்கா திட்டம் போல, கடனா – கல்லாறு இணைப்புத் திட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடனா – கல்லாறு இணைப்புத் திட்டம்

கடனா – கல்லாறு இணைப்புத் திட்டத்துக்கு 2011ஆம் ஆண்டு ரூ.540 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டது. 2017ஆம் ஆண்டு திருத்திய மதிப்பீட்டின்படி ரூபாய் 1,600 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இப்போது அடுத்தகட்ட ஆய்வு நடைபெற்றுள்ளது.

கடனாநதி அணைக்கட்டில் அரசபத்து, குருவபத்து, வடகுருவபத்து, ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், மஞ்சள்புளிகால், காக்கநல்லூர், காங்கேயன் எட்டுக் கால்வாய்களில் பாசனம் நடைபெறுகிறது. காங்கேயன் கால்வாய் மூலம் பாப்பாக்குடி, இடைக்கால், அடைச்சாணி, முக்கூடல், அரியநாயகிபுரம், சங்கந்திரடு, கல்லூர் பகுதிகள் பாசனம் பெறுகின்றன.

வெள்ளம் அதிகமாக வரும் காலங்களில் விவசாய நிலங்களும், ஒரு சில கரையோரக் கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்படுகின்றன. இதைத் தவிர்க்கவும், வறண்ட பகுதிகளின் நிலத்தடி நீரை மேம்படுத்தவும் காக்கநல்லூர் - அடைச்சாணி பகுதியிலிருந்து சுமார் 117 கிலோமீட்டர் தூரம் மேட்டுக்கால்வாய் அமைத்து, மானூர் அருகே பள்ளமடைகுளம், அழகியபாண்டியபுரம் அருகே சிற்றாறு, கயத்தாறு அருகே உப்போடை, மணியாச்சி மலைப்பட்டி அருகே உப்போடை, கொம்பாடி ஓடை, எப்போதும்வென்றான் சோழபுரம் அருகே கல்லாறு ஓடைகளை இணைப்பதுதான் திட்டம்.

ஏற்கெனவே கன்னடியன் கால்வாய் திட்டத்தின்போது, திருவைகுண்டம் பகுதி விவசாயிகள் பெரும் போராட்டங்களை நடத்தியுள்ளதால், எதிர்ப்புகள் வராமல் தடுத்திட, தாமிரபரணி கோடைமேலழகியான் அணைக்கட்டில் இருந்து, வடக்கு கோடைமேலழகியான் கால்வாயை விரிவுபடுத்தி, கடனாநதியுடன் இணைத்து, காக்கநல்லூர் அணைக்கட்டில் இருந்து புதிய வெள்ளநீர் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மழை வெள்ளம் அதிகமாக வரும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாத காலங்களில், ஒவ்வோர் ஆண்டும் ஏழு நாட்கள், சுமார் 2,000 கனஅடி நீர் வெள்ளக்கால்வாய் மூலம் திறந்து விடப்பட்டால் 200க்கும் மேற்பட்ட குளங்கள் நிறைந்து விடும். இதனால் மேட்டுப்பகுதியில் வெள்ளத்தில் இருந்து பயிர்கள் காப்பாற்றப்படும், வறண்ட பகுதியில் நிலத்தடி நீர் மேம்படும். கிணற்றுப் பாசனம், குளத்துப் பாசனம் அதிகரிக்கும்.

பயன்பெறப் போகும் பாசனக் குளங்கள்

தலையணை, அடிவெட்டான்பாறை, வாழ்விலான்குடி, புலியூர், பாவூர், திருச்சிற்றம்பலம், மாறாந்தை, வீராணம், மானூர், நெட்டூர், பல்லிக்கோட்டை, உக்கிரன்கோட்டை, அழகியபாண்டியபுரம், பிள்ளையார்குளம், செழியநல்லூர், மேட்டு பிராஞ்சேரி, கங்கைகொண்டான் பகுதிகளில் ஏற்கனவே 17 தடுப்பணைகள் சிற்றாறு பாசனத்தில் உள்ளன. இத்திட்டத்தில் கூடுதல் தடுப்பணைகள் உருவாகும்.

மலைப்பட்டி உப்போடையில் இருந்து சில்லாங்குளம், கப்பிகுளம், பசுவந்தனை, பொம்மையாபுரம் வழியாக எப்போதும்வென்றான் நீர்த்தேக்கம் வரை தாமிரபரணி நீரால் நிரம்பும். பராக்கிரமபாண்டியன் குளத்தின் தொடர்ச்சியாக, அயிரவன்பட்டி, கல்லத்திக்கிணறு, பரிவில்லிகோட்டை, ஒட்டுடன்பட்டி, கொடியன்குளம், வேப்பன்குளம், புளியம்பட்டி, இளவேலங்கால், மருதன்வாழ்வு உள்ளிட்ட கிராமங்கள் பயன்பெறும்.

உப்போடை, ஒட்டன்கால்வாய், கொம்பாடி ஓடை இணைக்கப்படும். ஆரைக்குளம் அணையிலிருந்து பிரியும் இரு ஓடைகள் மூலம் ஆரைக்குளம், வேப்பன்குளம், துக்கன்குளம், ஓட்டப்பிடாரம் பெரியகுளம், முப்புலிவெட்டி குளம், ஆவரங்காடு குளம் வழியாக குளத்தூர், வள்ளிநாயகிபுரம், மேலமருதூர், தருவைக்குளம், வெள்ளப்பட்டி வரையிலும், குலசேகரநல்லூர் கரிசல்குளம், ஓசநூத்து குளம், சங்கராஜபுரம் குணவன்குளம், பூலிகுளம், செவல்குளம், புதுநகர் குளம், புதியம்புத்தூர் மலர்குளம், ராஜாவின்கோவில், சாமிநத்தம், வேலாயுதபுரம், அரசரடி, பட்டணமருதூர், ராஜாவின்கோவில், சாமிநத்தம், காயலூரணி, வீரபாண்டியபுரம் உள்ளிட்ட 50 குளங்களும் பயன்பெறுகின்றன.

மலைப்பட்டி, ஒட்டநத்தம், சங்கம்பட்டி, முறம்பன், தளவாய்புரம், கொம்பாடி, கைலாசபுரம், தட்டாப்பாறை, உமரிக்கோட்டை, செக்காரக்குடி, சிலுக்கன்பட்டி, புதுக்கோட்டை, கோரம்பள்ளம், காலாங்கரை, அத்திமரப்பட்டி, முத்தையாபுரம் பகுதிகள் உப்போடை மூலம் பயன்பெறுகின்றன.
 
சில்லாங்குளம், பசுவந்தனை, ஆலிமாநகர், பொம்மையாபுரம், மீனாட்சிபுரம், சோழபுரம், எப்போதும்வென்றான் நீர்த்தேக்கம், கீழமங்கலம், மேலமங்கலம், குப்பனாபுரம், ஆரைக்குளம், மேலமுடிமண், கீழமுடிமண் ஆவாரங்குளம், வெங்கடாசலபுரம், வெள்ளாரம் கரிசல்குளம், கவர்னகிரி, பாஞ்சாலங்குறிச்சி, கக்கரம்பட்டி, குறுக்குச்சாலை பகுதிகள் ஒட்டன்கால்வாய் மூலம் பயன்பெறுகின்றன. கல்லாறு மூலமாக காட்டுநாயக்கன்பட்டி, பஞ்சந்தாங்கி குளம், முள்ளூர், முத்துக்குமாரபுரம், வேடநத்தம், கொல்லம்பருப்பு, கல்மேடு, வேப்பலோடை பகுதிகள் பயன்பெறுகின்றன.

இந்தக் குளங்கள் அனைத்துமே சங்கிலித்தொடர் கண்மாய்கள் ஆகும். ஓரிரு நாள் கனமழை பெய்தாலே அத்தனை குளங்களும் நிரம்பிவிடும். ஆனால், பருவநிலை மாற்றத்தின் காரணமாக பருவமழை பொய்த்துவிட்டது. மானாவரி நிலங்களில் மழையை நம்பி பயிர் செய்ய இயலவில்லை. குளத்துப் பாசனத்தை நம்பியிருக்கும் வயல்களுக்கு நீர்த் தட்டுப்பாடு. அனல்மின் நிலையங்கள், காற்றாலைகள், சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையங்கள், வேதிப்பொருள் தொழிற்சாலைகள், சிப்காட், ஸ்டெர்லைட், கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்கள் அத்தனையும் ஒரே தொகுதியில், நெருக்கமாக அமைந்துவிட்டதால் நீர்நிலைகளும், நீர்வரத்துக் கால்வாய்களும் வழிமறிக்கப்பட்டு விட்டன. வேளாண்மைக்கு நீர் இல்லாமல் தவிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு விட்டனர். நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. 

ஓரளவு நிலத்தடி நீர் இருந்தாலும் அவை லாரிகளில் மூலம் உறிஞ்சி எடுக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு விற்கப்பட்டதால் குடிநீருக்கே தவித்து வருகிறார்கள் மக்கள். தரமற்ற குடிநீரினை பயன்படுத்துவதால் சிறுநீரக நோய்களால் பெரும்பாலான மக்கள் உயிரிழக்கின்றனர். அதற்கெல்லாம் மாற்றாக அரசின் மழைநீர் சேகரிப்புத் திட்டமாக, மாநில அரசின் குடிமராமத்து திட்டமாக, மத்திய அரசின் நதிநீர் இணைப்புத் திட்டமாக கடனா – கல்லாறு இணைக்கப்பட்டால் விடிவுகாலம் பிறக்கும் என்று காத்திருக்கின்றனர் வேளாண் மக்கள்.

மாற்றுத்திட்டங்களும் ஆய்வுகளும்

சீவலப்பேரி ஆற்றுப் பகுதியைவிட ஓட்டப்பிடாரம் பகுதியிலுள்ள குளங்கள், ஓடைகள் உயரமாக இருக்கின்றன. மேட்டுக்கால்வாய் அல்லது நீரேற்று பாசனம் மூலம் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி பகுதியிலுள்ள 250 குளங்களை நிரப்ப முடியும்.

அதுமட்டுமல்ல; ஆறுகள் உற்பத்தியாகும் களக்காடு, மாஞ்சோலை, பொதிகை மலைப் பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டதால் நீர்வரத்து குறைந்து விட்டது. மழை பெய்தால் மட்டுமே குற்றால சீசன் என்ற நிலைதான் இருக்கிறது. மலைவளம் மேம்படுத்தப்பட்டால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால் மேலும் புதிய திட்டங்களைச் செயல்படுத்தும் அளவுக்கு தாமிரபரணியின் நீர்வரத்தும் அதிகரிக்கும். வேளாண்மையும் செழிக்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பதிவாகவில்லை

Sponsored AdsThoothukudi Business Directory