» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 10:36:30 AM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் தைப்பூசத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா இன்று (பிப்.11) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து காலை 6.30 மணியளவில் கடலில் சுவாமி அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பின்னர், சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி, வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்துக்கு வந்து சேர்கிறார். அங்கு, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி, தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து, கோயிலைச் சேருகிறார்.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, கடந்த சில தினங்களாக பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்து குவிந்துள்ளனர். அவர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.



திருச்செந்தூர் கோயில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழா ஏற்பாடுகளை, கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர். எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து

முருக பக்தர்கள்Feb 11, 2025 - 12:53:09 PM | Posted IP 172.7*****

ஓம் சரவணபவ

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory