» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செல்போன் கோபுரம் மீது ஏறி அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை மிரட்டல்: தென்காசியில் பரபரப்பு

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:34:07 AM (IST)

தென்காசியில் செல்போன் கோபுரம் மீது ஏறி அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் மாடக்கண்ணுபட்டி பகுதியைச் சேர்ந்த ராமராஜா மகன் ராம்குமார் (27). இவர் செங்கோட்டையில் உள்ள அரசு பஸ் போக்குவரத்து கழகத்தில் தற்காலிக கண்டக்டராக பணியாற்றி வந்தார். தென்காசி ரெயில் நிலையம் அருகில் தாலுகா அலுவலக வளாக பகுதிக்கு நேற்று காலையில் ராம்குமார் வந்தார். அவர் திடீரென்று அங்குள்ள சுமார் 150 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி அமர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் தென்காசி போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா தலைமையிலான வீரர்கள், போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ராம்குமார் கீழே இறங்கி வர சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் 2 பேர் செல்போன் கோபுரத்தில் ஏறி, ராம்குமாரை பத்திரமாக மீட்டு கீழே இறக்கி கொண்டு வந்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அதில், அரசு பஸ் போக்குவரத்து கழகத்தில் தற்காலிக கண்டக்டராக ராம்குமார் பணியாற்றி வந்தார். அவருக்கு ஒரு அதிகாரி முறையாக பணி ஒதுக்கீடு செய்யவில்லை என்று மேல் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். இதனால் அந்த அதிகாரி, ராம்குமாருக்கு தொடர்ந்து பணி ஒதுக்கீடு செய்ய மறுத்து வந்தார். இதுதொடர்பாக தென்காசி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ராம்குமார் புகார் மனு அளித்தார். மேலும் ராம்குமாரின் அசல் ஓட்டுனர் உரிமத்தை போக்குவரத்து கழகத்தில் வைத்துக்கொண்டு தர மறுப்பதாகவும் புகார் தெரிவித்து இருந்தார்.

அந்த மனு மீது நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் பதில் அளித்த போக்குவரத்து கழக அதிகாரி, அசல் ஓட்டுனர் உரிமம் காணவில்லை என்றும், வட்டார போக்குவரத்து கழகம் மூலமாக பரிந்துரை கடிதம் அனுப்பி நகல் ஓட்டுனர் உரிமம் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் கூறிச்சென்றார். ஆனால் கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகியும் அதிகாரி, ஓட்டுனர் உரிமம் வழங்காமலும், முறையாக பணி ஒதுக்கீடு செய்யாமலும், தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக ராம்குமார் தெரிவித்து வந்தார்.

இதனால் மனமுடைந்த அவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory