» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இலவச முட்டைகளை விற்பனை செய்த சத்துணவு அமைப்பாளர் கைது; ஓட்டலுக்கு சீல்!

வெள்ளி 20, செப்டம்பர் 2024 8:21:25 AM (IST)



துறையூரில் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச முட்டைகளை ஓட்டலுக்கு விற்பனை செய்த சத்துணவு அமைப்பாளர் மற்றும் ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டனர். ஓட்டலுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், துறையூரில் சுமார் 25-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் காப்பகம், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில் தினமும் தமிழக அரசு சார்பில் ஏராளமான முட்டைகள் இலவசமாக பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் துறையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்பட்ட முட்டைகள் உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக அரசின் முத்திரையுடன் இருந்த அந்த முட்டைகள் மிகக்குறைந்த விலையில் வாங்கப்பட்டு, பல்வேறு விதமான உணவாக தயாரிக்கப்பட்டு விற்பனை ெசய்யப்பட்டுள்ளது.

மேலும் கடைக்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்து முட்டை, பாமாயில், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள், அந்த ஓட்டலுக்கு தினமும் விற்பனை செய்யப்பட்டதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். இந்த தகவல் துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத்தீ போல் பரவியது.

இதையடுத்து நேற்று துறையூர் தாசில்தார் மோகன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆகியோர் நேரடியாக அந்த ஓட்டலுக்கு சென்று ஆய்வு செய்து, கடையை பூட்டி ‘சீல்’ வைத்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஓட்டல் உரிமையாளர் ரத்தினம் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது அவர் மதுராபுரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி என்பவரிடம் இருந்து முட்டைகளை வாங்கியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து வசந்தகுமாரியை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் துறையூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் முட்டை மற்றும் அரிசி, பாமாயில் உள்பட மற்ற பொருட்களும் துறையூரில் உள்ள சில கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory