» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாரதத்தின் உந்து சக்தி விவசாயிகள்தான்: குற்றாலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

வியாழன் 28, செப்டம்பர் 2023 8:31:11 PM (IST)



தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இயற்கை விவசாயிகளுடன் ஓர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

யற்கை விவசாயிகள், வேளாண்மையாளர்கள் மற்றும் விவசாயிகள் சங்க உறுப்பினர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: இந்த நாள் எனக்கு சந்தோஷமான  நாள். இந்த இடம் எனக்கு சந்தோஷம் தரக்கூடிய இடம். வடக்கே காசி இருப்பது போல் தெற்கே தென்காசி உள்ளது. பாரதியார் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர் அதேபோல், பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களை உருவாக்கிய மண் இந்த மண்.

11-ம் நூற்றாண்டில் மத்திய ஆசிய நாடுகளை சேர்ந்தவர் நமது பாரம்பரியத்தை அழித்த போது, அதே போன்று கட்டிடங்களை பாரம்பரியத்துடன் தெற்கே உருவாக்கியவர் பராக்கிரம பாண்டிய மன்னன் ஆவார். நான் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்து விவசாய பணியில் என்னை ஈடுபடுத்தி வந்தேன்.  அதனால் எனக்கு விவசாயிகளை பார்க்கும் போது தனி மரியாதை ஏற்படுகிறது.

என்னை உங்களுக்கு ஒரு ஐபிஎஸ் அதிகாரியாகவும், கவர்னராகவும் தான் தெரியும். விவசாய பணி என்பது கடினமானது. விவசாயிகளின் வாழ்க்கை என்பது அதிகமான மேடு பள்ளங்களை கொண்டது.இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயின்ற பலர் இயற்கை விவசாயம் செய்து வருவது பாராட்டத்தக்கது. இயற்கை விவசாயத்தின் மூலம் வேதிபொருட்கள் இல்லாத உடலுக்கு நன்மை தரக்கூடிய உணவு பொருட்களை  உற்பத்தி செய்யலாம்.

காலநிலை மாறுபாட்டின் காரணமாக பல்வேறு இயற்கை மாற்றங்கள் ஏற்படுகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரு சில வருடங்களில் பல நாடுகள் அழியும் நிலைக்கு தள்ளப்படும். நமது நாடு காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் உலகத்திற்கே உதாரணமாக உள்ளது. உலகத்திற்கே எடுத்துக்காட்டாக உள்ள நமது பாரதத்தின் உந்து சக்தி விவசாயிகளாகிய நீங்கள் தான்.

பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய லைஃப் என்ற திட்டம் ஐநா சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதில் நாம் வாழ்க்கையை எவ்வாறு நகர்த்துகிறோம், இயற்கை சக்தியை எவ்வாறு உற்பத்தி செய்கிறோம், பயன்படுத்துகிறோம் என்பதை எல்லாம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னால் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்த திட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதை நம்முடைய பாரத பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்த திட்டத்தை உலக தலைவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டு வரவேற்றுள்ளனர் என்பதை இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன். ஆயிரக்கணக்கான வருடங்கள் நாம் விவசாயம் செய்து வருகிறோம். நமது நாட்டின் சொத்து விவசாயிகள் தான். இயற்கை விவசாயத்தை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தால் நல்ல லாபத்தை பெற முடியும். இயற்கை வேளாண்மை மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி  வருகிறார்கள். 

ஆகவே, சந்தைப்படுத்தல் முறையை நாம் தெளிவாக கற்று அதன் மூலம் விளைபொருட்களை விற்பனை செய்தால் கணிசமான லாபத்தை பெற முடியும். வரும் காலங்களில் இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்த தனியாக சந்தை உருவாக்கப்படும். அந்த காலகட்டத்தில் இயற்கை விவசாயம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory