» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வைக்கம் நூற்றாண்டு விழா: கேரள முதல்வர் அழைப்பு! மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்!

புதன் 22, மார்ச் 2023 3:36:34 PM (IST)

வைக்கம் நூற்றாண்டு விழாவில் கேரள முதல்வர் அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். 

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக நீதிக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் கேரளத்தில் நடைபெற்ற மிக முக்கியமான போராட்டம் வைக்கம் போராட்டம் ஆகும். இங்குள்ள பிரசித்திப்பெற்ற மகாதேவர் கோயில் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் அன்றைக்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

இக்கொடுமைகளுக்கு எதிராக 1924-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் நாள் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் திருவாளர்கள் டி.கெ.மாதவன், கே.கேளப்பன், மன்னத்து பத்மநாபன், கே. பி. கேசவ மேனோன் போன்றோர் முன்னின்று செயல்பட்டனர்.மகாத்மா காந்தி இப்பகுதிக்கு நேரடியாக வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததும், மறுமலர்ச்சி நாயகர் தந்தைப் பெரியார் அவர்கள் வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்தியதும் வரலாற்று சிறப்புமிக்கதாகும்.

இதன்காரணமாக, தந்தைப் பெரியார் வைக்கம் வீரர் என அறியப்பட்டதும், வைக்கத்தில் அவரது நினைவாக சிலை எழுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அமைதியான முறையில் 603 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற வைக்கம் போராட்டம் 1925 நவம்பர் 23 ஆம் நாள் வெற்றிகரமாக முடிவுற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினை வரும் ஏப்ரல் திங்கள் ஒன்றாம் நாள் (01.04.2023) முதல் 603 நாட்கள் மிகச்சிறப்பாக கொண்டாட கேரள அரசு முடிவு செய்துள்ளது.

வைக்கம் போராட்ட வெற்றிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது என்பதால், கேரள, தமிழ்நாடு மாநில முதலமைச்சர்கள் இணைந்து வைக்கத்தில் உள்ள தந்தைப் பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தி, வைக்கம் போராட்ட வீரர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தி, நூற்றாண்டு விழாவினை தொடங்கி வைத்திட வேண்டுமென கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தினை, கேரள மாநில மீன்வளம், பண்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சாஜி செரியன் இன்று (22.03.2023) நேரில் வழங்கி நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்திட கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சரும் இவ்விழாவில் கலந்துக்கொள்ள தனது இசைவினைத் தெரிவித்துள்ளார்."


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory