» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக தலைமைப் பொறுப்பில் பழனிசாமி இல்லை: மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கடிதம்

புதன் 7, டிசம்பர் 2022 10:12:19 AM (IST)

அதிமுக தலைமைப் பொறுப்பில் பழனிசாமி இல்லை எனவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் தானே நீடிப்பதாகவும் மத்திய அரசுக்கு  ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையிலான மோதல் வலுத்துவரும் நிலையில், அண்மையில் டெல்லியில் நடந்த ஜி20 மாநாடு குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இது ஓபிஎஸ் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையடுத்து, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு ஓபிஎஸ்அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த டிசம்பர் மாதம் நடந்த கட்சிக் கூட்டத்தில் நான் ஏகமனதாக ஒருங்கிணைப்பாளர் பதவிக்குத் தேர்வானேன். இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950-ன்படி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அதிமுக தலைமைப் பொறுப்பில் பழனிசாமி இல்லை என்பதை தங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

அதிமுகவில் சிலர் ஒன்று சேர்ந்து பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்து இருப்பதாகக் கூறுகின்றனர். அதிமுகவின் சட்ட விதிகளுக்கு இது முற்றிலும் விரோதமானது. பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்திருப்பதை தலைமை தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பதையும் தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

எனவே எதிர்காலத்தில் இத்தகைய தவறு நடக்காமல் மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு பழனிசாமியை இனியும் மத்திய அரசு அழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory