» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிளாஸ்டிக்கில் உணவு பொருட்களை பொட்டலமிட தடை : மீறினால் அபராதம் - ஆட்சியர் அறிவிப்பு

திங்கள் 5, டிசம்பர் 2022 4:42:02 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக்கில் டீ, காபி, சாம்பார், சால்னா, ரசம் போன்ற சூடான உணவுப் பொருட்கள் பொட்டலமிடுவது தடை செய்யப்படுகின்றது. மீறும் உணவு வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத ப்ளாஸ்டிக் பைகள் அல்லது கொள்கலன்களில் சூடான உணவுப் பொருட்களை பொட்டலமிடும் பொழுது, அப்பைகளிலிருந்து, டைஈதைல்ஹெக்சைல் தாலேட் மற்றும் பிஸ்பினால்-v போன்ற வேதிப்பொருட்கள் வெளியாகி, அவை உணவுடன் கலந்துவிடும்.  வேதிப்பொருட்கள் கலந்த உணவினைத் தொடர்ந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு, ஹார்மோன் பிரச்சினைகள், சிறுநீரகக் கற்கள், ஈரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்ற நோய்கள் எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பதிற்கு பல அறிவியல் ஆய்வுகள் ஆதாரமாக உள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் (பொட்டலமிடுதல்) ஒழுங்குமுறைகள், 2018-ன் பட்டியல்-IIIல் உணவுப் பொருட்களைப் பொட்டலமிடப் பயன்படுத்த வேண்டிய உணவுத் தர பிளாஸ்டிக் பொருட்களின் வகைகள் குறித்தும், அதே ஒழுங்குமுறைகளின் பட்டியல்-IVல் உணவுப் பொருட்களின் வகைகளுக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டிய பொட்டலமிடும் பொருட்களின் வகைகளும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்தால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத ப்ளாஸ்டிக்கில் சூடான உணவுப் பொருட்களைப் பொட்டலமிடக் கூடாது எனவும், அதில் உள்ள ஆபத்துகள் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மேற்கொண்டுவந்துள்ளது. இருந்தாலும் பெரிய அளவில் மாற்றம் ஏதுமில்லை. எனவே, அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத ப்ளாஸ்டிக்கில் உணவுப் பொருட்களைப் பொட்டலமிடக்கூடாது என்பதை மேலும் வலியுறுத்தும் விதமாக, தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, "பிளாஸ்டிக்கும் பாழாப்போன பார்சலும்” என்ற விழிப்புணர்வு குறும்படத்தினை மாவட்ட ஆட்சியர்  இன்று வெளியுட்டுள்ளார்.

அதே வேளையில், சூடான உணவுப் பொருட்களை அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத ப்ளாஸ்டிக்கில் பொட்டலமிடுவதால், ப்ளாஸ்டிக்கிலிருந்து வெளிப்படும் வேதிப்பொருட்களால் நுகர்வோர்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட உள்ள பொது சுகாதாரக் குறைபாடுகளைத் தடுக்க, சூடான உணவுப் பொருட்களை, அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத ப்ளாஸ்டிக்கில் பொட்டலமிடுவதைத் தடை செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகின்றது.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் சூடான உணவுப் பொருட்களை அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத ப்ளாஸ்டிக்கில் பொட்டலமிடுவது இன்று முதல் தடை செய்யப்படுகின்றது. இதற்கான உரிய ஆணை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர்  இன்று உத்தரவிட்டுள்ளார். இது உடனே அமலுக்கு வருவதால், உணவு வணிகர்கள் டீ, காபி, பால், சாம்பார், ரசம் மற்றும் இதர சூடான குழம்பு வகைகளையும் கூட்டு, பொரியல் போன்ற சூடான உணவுப் பொருட்களையும் மேற்கூறிய ஒழுங்குமுறைகளின் கீழ் அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத ப்ளாஸ்டிக் பைகள் அல்லது கொள்கலன்களில் உணவுப் பொருட்களைப் பொட்டலமிட்டு விற்பனை செய்யக்கூடாது எனவும் உத்திரவிடப்படுகின்றது. 

தவறும்பட்சத்தில், குற்றமிழைத்தவர் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் பெற்றவராகவோ அல்லது அதற்குத் தகுதி வாய்ந்தராகவோ இருப்பின், மேற்கூறிய சட்டத்தின் பிரிவு 69-ன் கீழ் "சமரசத் தீர்வு” மூலம் அபராதம் விதிக்க மாவட்ட நியமன அலுவலருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினைப் பிரயோகித்து, அதே சட்டத்தின் பிரிவு 55, 56 மற்றும் 58-ன் கீழ், முதல் முறையாக குற்றம் செய்தவராக இருப்பின், ரூ.2000/-ற்கு மிகாமலும், இரண்டாம் முறை குற்றமிழைத்தால், ரூ.5000/-ற்கு மிகாமலும் அபராதம் விதிக்கப்படும். ஆனால், ஒரே வணிகர் திரும்பவும் மூன்றாம் முறையாகக் குற்றமிழைத்தால், ரூ.10000/- அபராதம் விதிக்கப்படுவதுடன், உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு, கடையின் இயக்கத்தினை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

அதேசமயத்தில், குற்றமிழைத்தவர் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றவராக இருந்தால், மாவட்ட வருவாய் அலுவலரிடத்தில் மேற்கூறிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது. உணவு வணிகர்கள் தங்களது கடைகளின் முகப்பில், "இங்கு அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத ப்ளாஸ்டிக் பைகள் அல்லது கொள்கலன்களில் உணவுப் பொருட்களைப் பொட்டலமிட்டு விற்பனை செய்யப்படமாட்டாது” என்ற அறிவிப்பு பலகையை நிறுவ வேண்டும் எனவும், நுகர்வோர்கள் உணவுப் பொருட்களைப் பார்சல் வாங்க, தூக்குவாளி, பிளாஸ்க், டிபன் பாக்ஸ், டிபன் கேரியர் உள்ளிட்ட பாத்திரங்களை கொண்டு சென்று மாவட்ட நிர்வாகத்தின் இந்நல்முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்படுகின்றது.

மனு கொடுத்த சிறிது நேரத்தில் ஆணை

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்த சிறிது நேரத்தில் மூதாட்டிக்கு உதவித்தொகைக்கான ஆணையை ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த ஆட்சியர், வாசலில் மனு கொடுப்பதற்காக மாப்பிள்ளையூரணியை சேர்ந்த மூதாட்டி தங்கம்மாள் என்பவர் அமர்ந்து இருந்தார். அவரிடம் இருந்து மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், உடனடியாக உதவித்தொகைக்கான ஆணை வழங்க உத்தரவிட்டார். அதன்படி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான ஆணையை ஆட்சியர், அந்த மூதாட்டியிடம் வழங்கினார். 

மனுகொடுத்த சிறிது நேரத்தில் உதவித் தொகைக்கான ஆணை கிடைத்ததால், மூதாட்டி மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்.  நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி உதவி ஆட்சியர் கவுரவ்குமார், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் வீரபுத்திரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory