» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்!

திங்கள் 26, செப்டம்பர் 2022 11:40:56 AM (IST)

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்துக்கு அரசு விரைந்து முடிவு கட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். 

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: கோவை உட்பட தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள், பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளன. தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான இந்த வன்முறை நிகழ்வுகள் கட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கு மாறாக, பிற பகுதிகளுக்கு பரவி வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. அமைதிப் பூங்கா என்ற தமிழகத்தின் பெருமைக்கு பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் குந்தகத்தை ஏற்படுத்தி விடக்கூடாது.

தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அவற்றின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. இவ்வளவுக்கு பிறகும் ஓரிருவரைத் தவிர, குற்றவாளிகள் கைது செய்யப்படாதது கவலை அளிக்கிறது. பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபடுவோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவர் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தின் அமைதி, வளர்ச்சி, தொழில் முதலீடுகளை ஈர்த்தல் உள்ளிட்ட அனைத்துக்கும் சட்டம் - ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டியது அவசியம். இதை கருத்தில்கொண்டு பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்துக்கு தமிழக அரசு விரைந்து முடிவு கட்ட வேண்டும்.

கமல்ஹாசன் அறிக்கை

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: தமிழகத்தில் பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் அமைப்புகளை சேர்ந்தோரின் வீடுகள், வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு, தீவைப்பு சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்த சம்பவங்களில் ஈடுபட்ட யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள யாரும் இதுபோன்ற வன்முறையை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள். எந்தச் சூழ்நிலையிலும் தமிழக மண்ணில் வன்முறை கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம். அமைதிப் பூங்கா என்று பெயரெடுத்த தமிழகத்தை, வெடிகுண்டு கலவர கலாச்சாரத்துக்கு மாற்ற முயல்வோரை இரும்புக் கரம் கொண்டு அடக்கி, சட்டம்-ஒழுங்கையும், அமைதியையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

PODHU JANAMSep 26, 2022 - 05:04:07 PM | Posted IP 162.1*****

thiravida model il idhellam sahajamappa.

athukkuSep 26, 2022 - 12:43:02 PM | Posted IP 162.1*****

neenga onnum panna mudiyathu. people should be olukka seelar

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory