» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீண் விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிப்பதில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சனி 2, ஜூலை 2022 4:03:20 PM (IST)



மக்களுக்கு நன்மை செய்வதற்கே நேரம் போதவில்லை. வீண் விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிப்பதில்லை என முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

கரூரில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கரூரில் அடிக்கல் நாட்டப்படும் புதிய திட்டப்பணிகள் விரைவில் நிறைவுபெறும். அதனை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்துவோம். ஆட்சிக்கு வந்தால் துறைகளை பற்றி தெரிந்து கொள்ள 6 மாதங்கள் ஆகும். ஆனால், ஆட்சிக்கு வந்த நாள் முதலே, நொடி முதல் கால அவகாசம் எடுத்து கொள்ளாமல் செயல்படுகிறோம்.ஓராண்டு கால ஆட்சி மன நிறைவை தருகிறது.

வீண் விமர்சனங்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. மக்களுக்கு நன்மை செய்யவே நேரம் போதவில்லை. எனவே அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு பதில் சொல்லவிரும்பவில்லை. மானத்தை பற்றி கவலைப்படாதவர்களுடன் போராட முடியாது. மானத்தை பற்றி கவலைப்படாதவர்கள் வைக்கும் விமர்சனங்களை மதிக்க விரும்பவில்லை

வீண் விமர்சனம் செய்வோர் குறித்து பரிதாபப்படுகிறேன். பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், கீழ்நிலை தட்டு மக்கள், விவசாயிகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் ஆட்சி பற்றி கேளுங்கள். நான், அனைவரின் கருத்துகளை கேட்டு செயல்படுபவன் . நான் நினைத்தது மட்டும் நடக்க வேண்டும் என நினைப்பவன் அல்ல. நாங்கள் இருக்கிறோம் என காட்டி கொள்ளும் மைக் முன் வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. வீண் விமர்சனங்கள் முன்வைத்து என்னை விமர்சித்து வளர நினைப்பவர்கள் குறித்து பரிதாபப்படுகிறேன். 

உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சி. ஏனென்றால் தலைவர் கலைஞர் அவர்கள் என்னுள் இருந்து என்னை இயக்கிக் கொண்டு இருக்கிறார். தலைவர் கலைஞர் அவர்கள் இருந்தால், என்ன நினைப்பார், என்ன சிந்திப்பார், எப்படிச் செயல்படுத்துவார் என்று நித்தமும் சிந்தித்து, நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். மக்கள் கையில் கொடுத்துள்ளோம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு மக்களுக்கு பயனுள்ள காலமாக இந்த ஓராண்டு காலம் அமைந்திருக்கிறது. 

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை, அனைத்தையும் அல்ல, பலவற்றை, இந்த ஓராண்டிலேயே நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம். இந்த ஓராண்டு காலத்தில்  ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்திருக்கக்கூடிய சாதனைகளைப் பார்க்கும்போது நான் மனநிறைவை அடைகிறேன். இந்த ஓராண்டு காலமானது எனக்கு மனநிறைவைத் தருகிறது. ஒவ்வொருவருக்கும் அவரது மனச்சாட்சிதான் நீதிபதி என்று சொல்லுவார்கள். அந்த வகையில் எனது மனசாட்சி அளிக்கும் தீர்ப்பு இது!


இதுதான் மக்களுடைய மனங்களிலும் இருக்கிறது என்பதன் அடையாளம் தான் உங்கள் முகங்களில் பார்க்கக்கூடிய மகிழ்ச்சி. நான் செல்கின்ற இடமெல்லாம் மக்கள் அலையலையாக வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, அந்த மக்களின் முகங்களில் நான் மலர்ச்சியைப் பார்க்கிறேன், மகிழ்ச்சியைப் பார்க்கிறேன். 'உன்னுடைய ஆட்சிக் காலத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்' என்று அவர்கள் முகங்கள் சொல்கின்றது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். இந்த முகங்களின் மூலமாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மக்களை முன்னேற்றும் ஆட்சியாக அமைந்துள்ளதை என்பதை தெளிவாக அறிய முடிகிறது.   இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory