» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அடகு கடையில் ரூ‌.1¼ கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை: சுவரில் துளைபோட்டு கைவரிசை!

புதன் 25, மே 2022 10:15:24 AM (IST)

வேலூர் அருகே உள்ள அடகு கடையின் சுவரில் துளைபோட்டு ரூ‌.1¼ கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

வேலூர் மாவட்டம், மேல்பாடியை சேர்ந்தவர் பாண்டு. இவர் தி.மு.க முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவருடைய மகன் அனில்குமார் (24) சேர்க்காடு கூட்ரோட்டில் சித்தூர் செல்லும் சாலையில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்த கடையை ஒட்டி ஜூஸ் கடை, ஏ.டி‌.எம்‌ உள்ளிட்ட கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு பின்புறம் காலி இடம் உள்ளது. நேற்றிரவு அனில்குமார் வழக்கம்போல கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் அடகு கடையின் பின்னால் இருந்து சுவற்றை துளையிட முயற்சி செய்தனர். அடகு கடையின் சுவர் கான்கிரீட் கொண்டு கட்டபட்டிருந்ததால் சுவற்றை உடைக்க முடியவில்லை. இதனையடுத்து அடகு கடையின் பக்கத்தில் உள்ள ஜூஸ் கடையின் சுவரை துளையிட்டு அந்த கடைக்குள் சென்றனர். பின்னர் ஜூஸ் கடைக்குள் இருந்து அடகு கடையின் பக்கவாட்டு சுவற்றில் துளையிட்டு உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த லாக்கரை உடைத்து அதில் இருந்த சுமார் 90 பவுன் தங்க நகை, 30 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகள் என ரூ‌.1¼ கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தனர்.

அடகு கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து அதில் பதிவு செய்யக்கூடிய டிஸ்க் உள்ளிட்ட பொருட்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர். கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் இரும்பு கம்பி மற்றும் அறம் போன்றவற்றை பயன்படுத்தி லாக்கரை உடைத்துள்ளனர். நேற்று காலையில் கடைக்கு வந்த அனில்குமார் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து திருவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் சேகரிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.இதில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கேமராவை உடைத்து எடுத்துச் சென்றுள்ளதால் அடையாளம் தெரிந்தவர்கள் யாராவது கடைக்குள் புகுந்து இருக்கலாம். அவர்கள் தங்களை எளிதில் அடையாளம் தெரிந்துவிடும் என்பதால் கேமராவை எடுத்து சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடகு கடையில் சுவற்றில் துளையிட்டு நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory