» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுப்பதா? – பாஜக அரசுக்கு சீமான் கண்டனம்

செவ்வாய் 18, ஜனவரி 2022 3:21:59 PM (IST)

அதிகாரப்பலம் கொண்டு ஜீ தமிழ்  தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக மத்திய பாஜக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியின் நிகழ்ச்சியொன்றில் சிறுவர்கள் இருவர் மோசமான ஆட்சியாளர் குறித்து மன்னர், அமைச்சர் வேடமிட்டு, பகடி செய்ததற்காக அத்தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தலும், மிரட்டலும் விடுக்கும் பாஜகவின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பாஜகவின் ஆட்சி குறித்து அந்நிகழ்ச்சியில் நேரடியாக விமர்சிக்கப்படாதபோதும்கூட அத்தொலைக்காட்சியின் மீது அதிகாரத்தின் மூலம் அடக்குமுறையை ஏவிவிடத்துடிக்கும் பாஜகவின் செயல்பாடு கருத்துரிமை மீதானக் கோரத்தாக்குதலாகும்.

கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ் போன்ற கருத்தாளர்களும், செயற்பாட்டாளர்களும் கொலை செய்யப்படுவதும், ஆனந்த் டெல்டும்டே, வரவர ராவ், ஸ்டோன் சுவாமி போன்ற சமூகச்செயற்பாட்டாளர்கள் கொடுஞ்சட்டங்களின் மூலம் பிணைக்கப்படுவதும், ஊடகங்கள் வெளிப்படையாக அச்சுறுத்தப்படுவதுமான நிகழ்வுகள் நாட்டின் சனநாயகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

ஏழு ஆண்டுகால பாஜகவின் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட கொடும் சட்டங்கள், பேரழிவுத்திட்டங்களின் விளைவினால் நாட்டு மக்கள் வாடி வதங்கிக்கொண்டிருக்கையில், அதுகுறித்த அறச்சீற்றத்தையும், உள்ளக்குமுறலையும் வெளிப்படுத்தவும் தடையிடுவார்களென்றால், நடப்பது மன்னராட்சியா? மக்களாட்சியா? எனும் கேள்வி எழுகிறது. இது மக்களாட்சித் தத்துவத்திற்கெதிரான மாபெரும் சனநாயகப்படுகொலை; கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் அரசப்பயங்கரவாதம். 

இதனை ஒருபோதும் அனுமதிக்கவோ, சகித்துக்கொள்ளவோ முடியாது. அதிகாரப்பலம் கொண்டு ஊடகங்களை அடக்கியாள முற்படும் பாஜக அரசின் கொடுங்கோல் செயல்பாடுகளுக்கு எனது வன்மையான எதிர்ப்பினைப் பதிவுசெய்கிறேன்!


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory