» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வினால் மக்கள் கடுமையாக பாதிப்பு : காங்கிரஸ் குற்றச்சாட்டு

வெள்ளி 15, அக்டோபர் 2021 5:28:27 PM (IST)

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வினால் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் இதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. 

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் அதிரடியாக உயர்ந்து வாகன ஓட்டிகளை கலக்கமடைய செய்துள்ளது.  இந்த நிலையில், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டுமென்று தமிழக காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்று காரணமாகவும், பொருளாதார தேக்க நிலையினாலும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி வருகிறது.

இத்தகைய விலை உயர்வை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் பல போராட்டங்களை நடத்தி எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது. ஆனால், அந்த எதிர்ப்பை கடுகளவு கூட பொருட்படுத்தாமல் தொடர்ந்து பெட்ரோலிய பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வினால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.50 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.98.26 ஆகவும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்த 2 வாரங்களில் 14 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

2014-15 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கலால் வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.9.48 ஆக இருந்தது. தற்போது ரூ.32.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, ஒரு லிட்டர் டீசலுக்கு கலால் வரி ரூ.3.56ல் இருந்து ரூ.31.80 என கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் மீது கடந்த 7 ஆண்டுகளில் கலால் வரி 459% உயர்த்தப்பட்டு உள்ளது.  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2014ம் ஆண்டில் ரூ.410 ஆக இருந்தது. ஆனால், தற்போது 2021ம் ஆண்டில் ரூ.810 ஆக இரு மடங்கு விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதனால் போக்குவரத்து கட்டணம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயருகிற வாய்ப்பு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவற்றை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று ஒரு பக்கம், பொருளாதார பேரழவினால் ஏற்பட்ட பாதிப்பு ஒரு பக்கம் என, அனைத்து நிலைகளிலும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு, வாங்கும் சக்தி குறைந்து பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வினால் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அலட்சிய போக்குடன் மத்திய பா.ஜ.க. அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராடுவதன் மூலமே மக்களின் பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory