» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடித்த வனத்துறை

வெள்ளி 15, அக்டோபர் 2021 3:44:07 PM (IST)

மசினகுடி வனப்பகுதியில் தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலியை 2வது முறையாக மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் உயிருடன் பிடித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவன் எஸ்டேட், மேபீல்டு, நெல்லிக்குன்னு, மசினகுடி, சிங்காரா உள்ளிட்ட பகுதிகளில் 21 நாள்களாக புலியைத் தேடி வந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதுமலை புலிகள் காப்பக வனத்தில் உள்ள ஓம்பட்டா நீா்த்தேக்க வனப் பகுதியில் வனத் துறை வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் புலியின் நடமாட்டம் பதிவானதை வனத் துறையினா் கடந்த செவ்வாய்க்கிழமை உறுதி செய்தனா்.

அதைத் தொடா்ந்து, தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினா் போஸ்பாறா சங்கிலி கேட் வனப் பகுதிக்குள் நுழைந்தனா். அப்போது புலியின் நடமாட்டத்தை பாா்த்து உறுதி செய்தனா். ஆனால், வனத்தில் உள்ள புதருக்குள் புலி நடமாடுவதால் மயக்க ஊசி செலுத்த முடியாமல் குழுவினா் வெளியேறினா்.

இதைத் தொடா்ந்து, புலியை பிடிக்கும் பணியில் மோப்பநாய்களும், கும்கி யானைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதற்காக வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மரங்களில் பரண் அமைத்து அதில் அமர்ந்திருந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், மசினகுடி-முதுமலை சாலையில் புலி நடந்து சென்றதை பார்த்த வனத்துறையினர் வியாழக்கிழமை இரவு கால்நடை மருத்துவக் குழுவினரின் உதவியுடன் புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர். நான்கு முறை மயக்க ஊசியை செலுத்தியதில், 2 ஊசிகள் புலியின் உடம்பில் சென்று சேர்ந்த நிலையிலும் புலி வனப்பகுதிக்குள் அரை மயக்க நிலையில் தப்பிச் சென்றது. 

இதனைத் தொடர்ந்து தப்பிச் சென்ற புலியை தேடும் பணியில் 21ஆவது நாளாக இன்றும் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இன்று காலை மசினகுடி பகுதியில் புதருக்குள் சென்ற புலியை தொடர்ந்து கண்காணித்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர், பிற்பகல் 2.30 மணியளவில் இரண்டாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory