» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி: பக்தர்கள் குவிந்தனர்

வெள்ளி 15, அக்டோபர் 2021 3:09:50 PM (IST)

திருச்செந்தூர் உட்பட தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதி அளிக்கப்பட்டது. 

கரோனா பரவல் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் இன்று முதல் அளிக்கப்பட்ட கரோனா ஊரடங்கு தளர்வில் கோவில்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டுக்காக அனுமதிக்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் இன்று கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகிறார்கள். 

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று மாலை பரிவேட்டை திருவிழா நடக்கிறது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் கலந்துகொள்ள காலையிலேயே ஏராளமான பெண்கள் கோவிலுக்கு வந்தனர். நீண்ட வரிசையில் நின்று அவர்கள் சாமி கும்பிட்டனர். சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவிலிலும் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோவிலில் விஜயதசமி தினமான இன்று அதிகாலை முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்று சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்மனை தரிசித்து வருகின்றனர். தென்காசியில் பல நூறு ஆண்டுகள் பழமையான காசி விஸ்வநாதர் கோவில், அனைத்து வழிபாட்டு தலங்களிலும் காலை முதலே பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory